சிரஞ்சீவியின் பிறந்தநாள் பரிசாக ரிலீஸ் தேதியுடன் வெளியான ‘காட்ஃபாதர்’ டீசர்: ஆக்சன் ட்ரீட் ரெடி
ஐதராபாத்: தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். .
Recommended Video
சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா ட்ரீட் கொடுத்து அசத்தியுள்ளது 'காட்ஃபாதர்' டீம்.
'காட்ஃபாதர்' படத்தின் மிரட்டலான டீசருடன், ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.

67வது வயதில் மெகாஸ்டார்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, மெகா ஸ்டார் என கொண்டாடப்படுகிறார். இவரது படங்களை டோலிவுட் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி மகிழ்வது வழக்கம். தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழ், இந்தி, கன்னட மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமான சிரஞ்சீவி, இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இனியெல்லாம் ஜெயமே
டோலிவுட்டின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமான சிரஞ்சீவியின் படங்கள், வசூலில் எப்போது மாஸ் காட்டும். ஆனால், அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சில படங்கள், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சிரஞ்சீவியும் அவரது மகன் ராம் சரணும் இணைந்து நடித்திருந்த ‘ஆச்சார்யா' திரைப்படம், சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ஏமாற்றம் கொடுத்தது. இந்நிலையில், சிரஞ்சீவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘காட்ஃபாதர்', ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கி வருகிறார்.

லூசிபருக்கு சவால் விடும் காட்ஃபாதர்?
‘காட்ஃபாதர்' திரைப்படம் மலையாளத்தில் பிரமண்டமான வெற்றிப் பெற்ற ‘லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகி வருகிறது. பிருத்விராஜ் இயக்கிய முதல் படமான லூசிபரில், மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பொலிட்டிக்கர் திரில்லர் ஜானரில் உருவான இப்படத்தில், மோகன்லால் கேங்ஸ்டராகவும் அரசியல்வாதியாகவும் மாஸ் காட்டியிருப்பார். ‘லூசிபர்' மலையாள திரையுலகில் மிகப்பெரிய வசூல் செய்தது. இந்நிலையில், லூசிபருக்கு சவால் விடும் வகையில் காட்ஃபாதர் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கேமியோ ரோலில் சல்மான் கான்
மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ளார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், லூசிபர் படத்தில் பிருத்விராஜ் நடித்த கேரக்டரில் நடித்துள்ளார். அதேபோல், மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கேரக்டரில், தெலுங்கில் நயன்தாரா நடித்துள்ளார். சல்மான் கான் முதன்முறையாக தென்னிந்திய மொழித் திரைப்படத்தில் நடிப்பது, டோலிவுட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

மிரட்டலாக வெளியான டீசர்
இந்நிலையில், ‘காட்ஃபாதர்' டீசர் சிரஞ்சீவியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது. சிரஞ்சீவி, சல்மான் கான் இருவரின் அமர்க்களமான ஆக்சன் ட்ரீட்டாக உருவாகியுள்ள இந்த டீசர், ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. சிரஞ்சீவி கேங்ஸ்டராகவும், சல்மான் கான் அவரது நண்பராகவும் நடித்துள்ளனர். தமனின் பின்னணி இசை, மோகன் ராஜாவின் தரமான மேக்கிங் என அனைத்துமே சிறப்பாக வந்துள்ளது.

காட்ஃபாதர் ரிலீஸ் தேதி
பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆர்.பி. செளத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ், பல வருடங்களுக்குப் பிறகு ‘காட்ஃபாதர்' படத்தை இணைந்து தயாரித்துள்ளது. சிரஞ்சீவியின் பிறந்தநாளை ‘காட்ஃபாதர்' படத்தின் டீசருடன் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவர்களுக்கு இன்னும் ஒரு தரமான ட்ரீட்டை படக்குழு கொடுத்துள்ளது. அதன்படி, இந்தப் படம் அக்டோபர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











