மீண்டும் நடிக்க வரும் சிரஞ்சீவி ரூ 1 கோடி பரிசு தர்றாராம்.. உங்ககிட்ட நல்ல கதை இருக்கா??
ஹைதராபாத்: சிரஞ்சீவி மறுபடியும் சினிமாவில் நடிக்க வருகிறார். அவருக்கு பொருத்தமான கதை சொல்பவர்களுக்கு ரூ 1 கோடி பரிசும் அறிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முதல் நிலை நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி. ஏராளமான மெகா ஹிட் படங்களில் நடித்தார்.
என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணா போன்றோர் முன்னணி நடிகர்களாக இருந்த கால கட்டத்தில் தெலுங்கு படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார்.

பிரஜா ராஜ்யம்
சில வருடங்களுக்கு முன் திடீரென சினிமாவை விட்டு விலகி பிரஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சியை துவங்கினார். ஓரளவு வெற்றிகரமாகத்தான் வலம் வந்தார். ஆனால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. பிறகு காங்கிரசோடு அக்கட்சியை இணைத்தார்.

மத்திய அமைச்சர்
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். கடந்த தேர்தலில் சீமாந்திரா பகுதியின் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசார கமிட்டி தலைவராக செயல்பட்டார். ஆனால் ஆந்திராவில் காங்கிரஸ் பெரும் தோல்வி அடைந்தது.

மீண்டும் சினிமா
தேர்தலில் ஜெயித்திருந்தால் ஆந்திர முதல்வராகும் வாய்ப்பு இருந்தது அவருக்கு. எனவே மீண்டும் சினிமாவில் நடித்து, செல்வாக்கை உயர்த்த முடிவு செய்துள்ளார்.

1 கோடி பரிசு
தனது மறுபிரவேச படம் பெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என முடிவெடுத்தவர், பிடித்தமான சிறந்த கதையுடன் வரும் கதாசிரியருக்கு ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

பெரும் போட்டி
இந்த பரிசுத் தொகையைக் கேட்டதுமே திருவிளையாடல் தருமியின் மனநிலைக்கு வந்துவிட்டனர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா கதாசிரியர்கள். தினமும் தன் வீட்டுக்கு வரும் பல கதாசிரியர்களிடம் சலிக்காமல் கதை கேட்ட வண்ணம் உள்ளார் சிரஞ்சீவி.


Click it and Unblock the Notifications











