சிரஞ்சீவியின் ஆச்சாரியா திரைப்படம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஹைதராபாத் : தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் ரிலீசுக்காக அவரது ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கொரடலா சிவா இயக்கும் இந்த படத்தை தயாரிப்பவர் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண். படத்தை தயாரிப்பது மட்டுமில்லாமல் அதில் சிரஞ்சீவியுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
தற்போது ஆச்சாரியா படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ராம்சரண் - சிரஞ்சீவி இணைந்து
ஆந்திராவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. ஏழ்மையான நிலையில் இருந்து சூப்பர் ஸ்டாராக மாறி பல பேருக்கு முன்னுதாரணமாக இருந்து வருபவர். இடையில் 10 வருடங்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டு அதில் இருந்து முழுமையாக விலகினார். அரசியலில் இருந்து விலகி கைதி 150 எனும் படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். அதன்பிறகு சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தார். படம் விமர்சன ரீதியாக பெயர் பெற்று தந்தாலும் கமர்சியல் ஹிட் ஆகாமல் போனது. சிரஞ்சீவி ஒரு மாஸ் ஹிட் எதிர்பார்க்கும் நேரத்தில் இயக்குனர் கொராடல சிவா படத்தில் நடிக்கப் போவதாக வந்த தகவல் அவர் ரசிகர்களை பேரானந்தம் அடைய செய்தது.

தோல்வி படம் தராத கொராடல சிவா
திரைக்கதை ஆசிரியராக இருந்த கொரடலா சிவா பல வெற்றி படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்து பிரபாஸ் நடித்த மிர்ச்சி எனும் படத்தை இயக்கினார். படம் சூப்பர் ஹிட். அதன் பிறகு ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ், பரத் அனே நெனு போன்று வரிசையாக ஹிட் கொடுத்து தோல்வி படம் தராத இயக்குனர் என பேசப்பட்டார். சிரஞ்சீவி - கொரடலா சிவா காம்பினேஷன் உறுதியானதும் படம் கமர்சியல் ஹிட் ஆகும் என உறுதி செய்யப்பட்டது. முதலில் சிரஞ்சீவி கதாநாயகன் என அறிவிக்கப்பட்டது பிறகு அதில் ராம்சரண் நடிக்க உள்ளார் என செய்தி வந்ததும் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

Acharya U/A
ஆச்சார்யா முழு படம் தயாராகி பல மாதங்களாகியும் சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிபோனது. இதற்கிடையில் படத்தின் ட்ரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில் படத்தின் ஒரு பாடலான " Bale bale banjara " முழுப்பாடலும் ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலில் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் இணைந்து ஆடும் நடன அசைவுகளை ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. ஆச்சார்யா திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு U/A சர்டிபிகேட் பெற்றுள்ளது.

ஆச்சார்யா ரிலீஸ் தேதி அறிவிப்பு
பல காரணங்களுக்காக தள்ளிப்போன ஆச்சாரியா திரைப்படம் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதால் பிரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது படக்குழு. ஏப்ரல் 23ஆம் தேதி பெரிய அளவில் படத்தின் ரிலீஸ் ஈவன்ட் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் இப்போதே தயார் நிலையில் உள்ளனர். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் ராஜமௌலி கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











