ரகசியமாக வைத்த டைட்டிலை பொசுக்கென்று போட்டுடைத்த ஹீரோ... இயக்குனரிடம் மன்னிப்புக் கேட்டார்!
ஐதராபாத்: விழா ஒன்றில் தவறுதலாக தனது படத்தின் டைட்டிலை சொல்லிவிட்ட, மெகா ஸ்டார், அதற்காக இயக்குனரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
சில காலம் முன்பு வரை படத்தின் டைட்டிலோடுதான் ஷூட்டிங்கே தொடங்கும். சமூக வலைத்தளங்கள் வந்தபிறகு சினிமா மாறிவிட்டது.
எல்லாவற்றுக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியிடுவதுதான் இப்போதைய ஸ்டைல்.

பர்ஸ்ட் லுக்
படத்தின் டைட்டிலை கூட ரகசியமாக வைத்திருந்து, திடீரென்று சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள். இல்லை என்றால், அதற்கு முதல் நாளே, 'நாளை மாலை முக்கியமான அறிவிப்பை வெளியிடுகிறோம்' என்று அதற்கும் ஒரு ட்விஸ்ட் வைப்பார்கள். சமீபகாலமாக இப்படித்தான் பாடல்கள், பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்படுகின்றன.

கொரட்டலா சிவா
தெலுங்கு சினிமாவிலும் அப்படித்தான். ஆனால், மெகா ஸ்டார் ரகசியமாக வைத்திருந்த தங்கள் படத்தின் டைட்டிலை கேஷூவலாக விழா ஒன்றில் சொல்லிவிட, அது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. தெலுங்கு மெகா ஸ்டாரான சிரஞ்சீவி, சைரா நரசிம்ம ரெட்டி படத்தை அடுத்து, கொரட்டலா சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

டைட்டிலுக்கு விழா
இதில், த்ரிஷா ஹிரோயின். மகேஷ்பாபு முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்தை சிரஞ்சீவின் மகன் ராம் சரண் தேஜா தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு ஆச்சாரியா என்ற டைட்டிலை படக்குழுவினர் வைத்திருந்தனர். டைட்டிலை வெளியிட விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்களாம்.

இப்போதைய ஹீரோக்கள்
இதற்கிடையே, ஓ பிட்ட கதா என்ற படத்தின் நிகழ்ச்சியில் சிரஞ்சீவி நேற்று கலந்து கொண்டார். விழாவில் பேசும்போது, இளம் ஹீரோக்கள் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். 'இப்போதைய ஹீரோக்கள் மதிய சாப்பாட்டுக்கு 1 மணிக்கு பிரேக் எடுத்தால், 3, 3.30 மணிக்குத்தான் மீண்டும் செட்டுக்கு வருகிறார்கள். நான் எனது ஆச்சார்யா படத்தின் ஷூட்டிங்கிற்கு ஒரு மணி நேரத்தில் திரும்பி விடுவேன்' என்றார்.

மறைக்க முடியவில்லை
உடனடியாக ரசிகர்கள் பயங்கரமாகக் கைதட்டினர். என்னவென்று தெரியாமல் சிரஞ்சீவி ஆச்சரியப்பட, பிறகுதான் டைட்டிலை வெளிப்படுத்திய விஷயம் தெரிந்தது. உடனே, இயக்குனர் கொரட்டலா சிவாவிடம் மன்னிப்புக் கேட்ட சிரஞ்சீவி, 'டைட்டிலை வெளியிட நீங்கள் விழா நடத்தக் கூட திட்டம் வைத்திருந்து இருக்கலாம். நல்ல விஷயங்களை மறைக்க முடியவில்லை' என்றார். இதையடுத்து படத்துக்கு 'ஆச்சாரியா'தான் டைட்டில் என்பது உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











