மது ஒழிப்பு போராளியா? சாராயம் காய்ச்சி விற்கும் டானா? புதிய கதையில் மிரட்டும் மகான் டிரைலர்!
சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் த்ருவ் விக்ரம் இணைந்து முதல் முறையாக நடித்துள்ள மகான் திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி மகான் திரைப்படம் வெளியாகிறது.
தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகாதது விக்ரம் மற்றும் த்ருவ் விக்ரம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக அமைந்துள்ளது.

மகான் டிரைலர்
சமீபத்தில் மகான் படத்தின் டீசர் வெளியாகி இதுவரைக்கும் வந்த கார்த்திக் சுப்புராஜ் படங்களில் இருந்து வித்தியாசமான ஒரு படமாக மகான் படம் இருக்கும் என்பதை உணர்த்தியது. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள டிரைலரில் ஏகப்பட்ட விஷயங்கள் ரசிகர்கர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

ஜகமே தந்திரம் சொதப்பல்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியான ஜகமே தந்திரம் பெரிய சொதப்பலாக அமைந்த நிலையில், இந்த படத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார். அதே போல சாமி ஸ்கொயர் படத்தின் தோல்விக்கு பிறகு விக்ரமுக்கு மகான் படம் நிச்சயம் வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காந்தி மகான்
மகான் என்கிற பெயரே காந்தி மகானை முன் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது என்பது வெளியான டிரைலரில் தெளிவாக ஒவ்வொரு காட்சியிலும் சொல்லப்பட்டிருக்கிறது. மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை தன்னை போலவே தனது மகனும் மதுவுக்கு எதிராக போராட வேண்டும் என அவருக்கு மகான் என பெயர் வைக்க மகன் எப்படி சாராயம் காய்ச்சி விற்கும் டானாக மாறுகிறான் என்பது தான் இந்த படத்தின் கதை என்பது டிரைலரிலேயே காண்பிக்கப்பட்டுள்ளது.

தாதாவாக த்ருவ் விக்ரம்
அப்பாவுடன் முதல் முறையாக மகன் த்ருவ் விக்ரம் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார். அறிமுக படமான ஆதித்ய வர்மா படம் சொதப்பிய நிலையில், கோலிவுட்டில் வெற்றியை தேடி சிறப்பான நடிப்பை கொட்டித் தீர்த்து இருக்கிறார் த்ருவ் விக்ரம். ஸ்க்ரீனை பார்த்து உஷ் என சொல்லி சுடும் காட்சிகள் எல்லாம் தரமான சம்பவம்.

50 ரூபாய் கம்மியா இருக்கு
சாதாரண பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் விக்ரமிடம் அவரது மனைவியாக இருக்கும் சிம்ரன் சம்பளப் பணத்தில் 50 ரூபாய் கம்மியா இருக்கு என எரிந்து விழும் காட்சிகள் டிரைலரில் இடம்பிடித்துள்ளன. பள்ளியிலும் மாணவர்கள் மகான் காந்தி மகான் என பாடம் நடத்தும் போது கிண்டல் செய்து வருகின்றனர். தனக்கு பிடித்த வாழ்க்கையை தேடி எப்படி தடம் புரள்கிறார் விக்ரம் என்பதையும் கடைசியாக காந்தி சிலையுடன் விக்ரம் நகரும் காட்சிகளும் ஏகப்பட்ட தத்துவங்களையும் உள் குறியீடுகளையும் கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தியேட்டரில் வெளியாகி இருந்தால்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் படங்கள், தொடர்ந்து ஒடிடி தளங்களிலேயே வெளியாகி வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள இந்த படம் தியேட்டரில் வெளியாகி இருக்க வேண்டும் என்றும் ஒடிடி ரிலீஸ் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக சியான் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். தியேட்டரில் வெளியாகி இருந்தால் வலிமை படத்துக்கு நல்ல போட்டியாக அமைந்திருக்கும் என்றும் ரசிகர்கள் கருதி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











