மாதம்பட்டி மட்டன் சாப்ஸ்.. வஞ்சரம் வறுவல்.. பிரியாணி.. தங்கலான் வெற்றி விருந்து.. பரிமாறிய விக்ரம்!
சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற 'தங்கலான்' படத்தின் வெற்றியை அந்த படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு விருந்து கொடுத்து மகிழ்ந்துள்ளார் விக்ரம்.
சியான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அனைவரும் வியந்து பார்த்து ரசித்து பாராட்டுகிறார்கள். இந்த தருணத்தில் சியான் விக்ரம் 'தங்கலான்' படத்தின் வெற்றிக்காக படத்தில் கடினமாக பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர்கள் , அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார்.

மாதம்பட்டி தங்கவேலு கைவண்ணத்தில் உருவான அசைவ விருந்தை நடிகர் விக்ரம் பரிமாறிய காட்சிகளும் அந்த விருந்தின் மெனுவும் வெளியாகி ரசிகர்களை வாயில் இருந்து வாட்டர் ஃபால்ஸ் வரவைத்துள்ளது.
தங்கலான் வெற்றி விருந்து: சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்திற்கு வருகை தந்த 500-க்கும் மேற்பட்டவர்களை சீயான் விக்ரம் வரவேற்றார். பின்னர் படத்தில் கடுமையாக உழைத்ததற்காக அங்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் தம்முடைய நன்றியை தெரிவித்தார் சீயான் விக்ரம்.

இதற்கு முன் 'தங்கலான்' படக்குழுவினருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளை சீயான் விக்ரம் அவர்களிடமே கேட்டு அறிந்து தேர்வு செய்து, அந்த உணவு வகைகளை பிரபலமான சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி தங்கவேலுவிடம் வழங்கியிருந்தார். அவருடைய கைப்பக்குவத்தில் உருவான சிறப்பு விருந்தினை தன்னுடைய நன்றியினை தெரிவிக்கும் வகையில் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது கையாலேயே உணவினை பரிமாறினார் சீயான் விக்ரம்.

படக்குழுவினர் சந்தோஷம்: சியான் விக்ரமின் இந்த செயலால் படத்தில் பணியாற்றிய அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக தொழிலாளர் குடும்ப உறுப்பினர்கள் சீயான் விக்ரமுடன் பேசி மகிழ்ந்ததுடன், செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் சீயான் விக்ரமுடன் 'தங்கலான்' படத்தில் நடித்த நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி, நடிகர் பசுபதி, படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் திருமதி. நேகா ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தந்தை கே. ஈஸ்வரன், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்ஜெயன், இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விருந்து மெனு: தர்பூசணி இஞ்சி ஜூஸ், பைனாப்பிள் புதினா ஜூஸ், இளநீர் பாயாசம், பூசணி அல்வா, மட்டன் சாப்ஸ், வஞ்சரம் வறுவல், இறால் வறுவல், பிச்சிப்போட்ட கோழி, சிக்கன் குழம்பு கலக்கி, வெஜ் மட்டன் சாப்ஸ், வெஜ் ஃபிஷ் வறுவல், விருதுநகர் பன் பரோட்டா, பள்ளிப்பாளையம் சிக்கன், ஆம்பூர் ஸ்பெஷல் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி, மினி பன் தோசை, ஆந்திரா மீன் தொக்கு, சுலைமானி டீ மற்றும் ஐஸ்க்ரீம் என தடபுடல் விருந்து கொடுத்து அசத்தி விட்டார் சியான் விக்ரம்.

இந்தியில் தங்கலான்: அடுத்த வாரம் பாலிவுட் ரசிகர்களின் பார்வைக்கு தங்கலான் திரைப்படம் இந்தியில் வெளியாக காத்திருக்கிறது. அதற்கான புரமோஷன்களை செய்து வந்த சியான் விக்ரம் படத்தில் உழைத்த கலைஞர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் தடபுடல் விருந்து வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











