கர்ணன்ல கலக்கிட்டீங்க.. பையன் படத்தை தரமா பண்ணிடுங்க.. மாரி செல்வராஜை வாழ்த்திய சியான் விக்ரம்!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜை வீட்டுக்கே சென்று சந்தித்து வாழ்த்தி உள்ளார் சியான் விக்ரம்.
தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.
ஏகப்பட்ட பிரபலங்களும் கர்ணன் படத்தை பாராட்டி வரும் நிலையில், நடிகர் விக்ரமும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

கலெக்ஷன் கர்ணன்
இந்த ஆண்டு கொரோனா பாதிப்புக்கு பிறகு தியேட்டரில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து வெளியான கார்த்தியின் சுல்தான் திரைப்படமும் நல்ல கலெக்ஷனை அள்ளியது. இந்நிலையில், அந்த வரிசையில் நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படமும் கலெக்ஷன் கிங்காக மாறியுள்ளது.

குவியும் பாராட்டுக்கள்
இயக்குநர் மாரி செல்வராஜை நடிகர் விஜய்சேதுபதி, சமுத்திரகனி, மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், பா. ரஞ்சித் என ஏகப்பட்ட பிரபலங்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். அடித்தட்டு மக்களின் அடிப்படை பிரச்சனைகளை ஆத்திரத்தோடு கேட்கும் படமாக கர்ணனை இயக்கி உள்ளார் மாரி செல்வராஜ்.

வீட்டுக்கே சென்று
கர்ணன் படத்தை தரமாக கொடுத்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குநர் அந்தஸ்த்தை அடைந்து விட்டீர்கள் என இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டுக்கே சென்று சியான் விக்ரம் பாராட்டி உள்ளார். மாரி செல்வராஜ் மற்றும் விக்ரம் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்து மகன் படம்
பரியேறும் பெருமாள், கர்ணன் என இரு வெற்றி படங்களை இயக்கி உள்ள மாரி செல்வராஜ் அடுத்ததாக விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். சியான் 60 படம் முடிந்த கையோடு அந்த படத்தில் துருவ் விக்ரம் இணையவுள்ளார். கர்ணன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த விக்ரம் துருவ் விக்ரம் படம் குறித்தும் பேசியுள்ளாராம்.

வாய்ப்பு இருக்கா
இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் சூர்யா நடிக்க உள்ளதாக நேற்று தகவல்கள் பரவிய நிலையில், சியான் விக்ரமின் படத்தை மாரி செல்வராஜ் இயக்கும் வாய்ப்பும் அதிக அளவு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. #ChiyaanVikram என்ற ஹாஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











