Thangalaan - ஷூட்டிங் ஸ்பாட்டில் தேள், பாம்பு எல்லாம் இருந்தது.. தங்கலான் அனுபவம் பகிரும் விக்ரம்
சென்னை: Thangalaan Teaser (தங்கலான் டீசர்) தங்கலான் பட டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் இரஞ்சித் ஸ்டைலிலேயே இல்லை முகநூல் போஸ்ட்டுகளை பார்த்து கதை எழுதிவிட்டார்போல என இரஞ்சித்தை விமர்சிக்கவும் செய்தனர். குறிப்பாக துஷாரா விஜயன் ஏற்றிருந்த ரெனே கதாபாத்திரம் விமர்சனத்தை தாண்டி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தங்கலான் படத்தில் கமிட்டானார் இரஞ்சித்.

விக்ரம் நடிக்கும் தங்கலான்: தங்கலான் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் தயாரிக்கிறார். பெரிய வெற்றி ஒன்றுக்காக பல வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் விக்ரமுக்கு இந்தப் படம் நிச்சயம் அதனை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் சியானின் ரசிகர்கள்.
மிரட்டிய மேக்கிங் வீடியோ: விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உயிரை கொடுத்து நடித்திருக்கிறார் விக்ரம். நிச்சயம் இந்தப் படம் மூலம் அவரது வெற்றி ஏக்கம் தீர்ந்துபோகும் என ஆரூடம் கூறுகின்றனர். அதேபோல் தமிழ் சினிமாவின் உச்சக்கட்டமாக இந்தப் படம் அமையும் என்றும் அவர்கள் கணித்திருக்கின்றனர்.
ஷூட்டிங் ஓவர்: ஒகேனக்கல் பகுதியில் தொடங்கிய தங்கலான் ஷூட்டிங் பல்வேறு பகுதிகளில் நடந்தது. அதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் மதுரையில் பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் நடந்தது. அதனையடுத்து படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படமானது 2024 ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
டீசர் ரிலீஸ்; இந்த சூழலில் டீசர் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. டீசரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக இருக்கும் என்றும்; பா.இரஞ்சித் தனது மேக்கிங்கிலும், விக்ரம் தனது நடிப்பிலும் அதகளம் செய்துவிட்டனர் என்றும் உற்சாகத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
விக்ரம் பேச்சு: இந்நிலையில் தங்கலான் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விக்ரம் பேசுகையில், "தங்கலான் ஷூட்டிங்கை நான் ரொம்பவே என்ஜாய் செய்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் பா.இரஞ்சித் தன்னுடைய உதவி இயக்குநர்களிடம் டேய் தேள் கொண்டு வாடா பாம்பு கொண்டு வாடா என்பார். உடனே பத்து நிமிஷத்தில் வந்துடும். முள், கல் என அனைத்தும் இருக்கும் இடத்தில் செருப்பு இல்லாமல் கூட சென்றோம்.
எல்லா படங்களும் சிறந்த அனுபவம்தான். ஆனால் இந்த மாதிரி ஒரு அனுபவம் கிடைக்குமா என்று தெரியவில்லை. பா.இரஞ்சித்தின் படங்கள் அத்தனையும் பிடிக்கும். மெட்ராஸ் படத்திலிருந்தே அவரை கவனித்துவருகிறேன். சார்பட்டா பரம்பரை படத்தில் பின்னி எடுத்துவிட்டார். அதைவிட இந்தப் படம் அவ்வளவு சூப்பராக இருக்கும். இந்தப் படத்தை லைவ் சவுண்டில் எடுத்தோம். அதனால் ரொம்பவே சிரமப்பட்டு எடுத்தோம்.
இந்தியாவில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் சில கெட்ட விஷயங்களும் இருக்கின்றன. ஆங்கிலேயர் காலம் மட்டும்தான் நமக்கு தெரியும். ஆனால் சில விஷயங்களை போகப்போக மறந்துவிடுகிறோம். இப்போது இருக்கும் தலைமுறைக்கு அது தெரியுமா என்றுகூட தெரியவில்லை" என்றார். இந்த நிகழ்ச்சியில் விக்ரம், பா.இரஞ்சித், ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Click it and Unblock the Notifications











