ஆதித்ய வர்மா படத்தில் அறிமுகமான சியான் விக்ரம் மகன்.. இப்போ என்ன பண்ணிட்டு இருக்காரு பாருங்க!
சென்னை: சினிமாவில் சாதிக்க பல ஆண்டுகள் சியான் விக்ரம் போராடி தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ள நிலையில், அவரது மகன் துருவ் விக்ரமை எந்தவொரு போராட்டமும் இன்றி சினிமாவில் களமிறக்க நினைத்தார்.
ஆனால், அது துருவ் விக்ரமுக்கு அவ்வளவு எளிதான விஷயமாக இதுவரை தெரியவில்லை. அப்பாவை போல அவரும் போராடியே சாதிக்க வேண்டும் என்கிற சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக துருவ் விக்ரம் பதிவிட்டுள்ள போஸ்ட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

சோதனைக்கு பின் சாதனை
என் காதல் கண்மணி படத்தின் மூலம் 1990ல் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விக்ரம். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததன் பிறகு தான் அவருக்கு பாலா இயக்கத்தில் சூப்பர் ஹிட் படமான சேது கிடைத்தது. சேது படத்திற்கு பிறகு சியான் விக்ரம் வரிசையாக சேது, தில், காசி, ஜெமினி, தூள், சாமி என பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார்.

இந்த வயதிலும் மாஸ் காட்டுறாரு
56 வயதான சியான் விக்ரம் இந்த வயதிலும் மஹான், பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2, கோப்ரா, துருவ நட்சத்திரம், தங்கலான் என மாஸ் காட்டி வருகிறார். லியோ படத்திலும் சியான் விக்ரமின் கேமியோ இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. தனக்கு பிறகு தன் மகன் தமிழ் சினிமாவில் சிறந்த ஹீரோவாக விளங்க வேண்டும் என ஒரு தந்தையாக பல முயற்சிகளையும் விக்ரம் செய்து வருகிறார்.

ஆரம்பமே அடி
இயக்குநர் பாலாவை நம்பி தனது மகனை அறிமுகம் செய்யலாம் என சியான் விக்ரம் நினைத்த நிலையில், அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கை வர்மா என்கிற பெயரில் பாலா இயக்கிய இயக்கத்தை பார்த்து அப்பாவும் மகனும் தயாரிப்பாளரும் கடும் அப்செட் ஆகி விட்டனர். மொத்த படத்தையும் கிரிசாயா எனும் இயக்குநரை வைத்து மறுபடியும் எடுத்து ஆதித்ய வர்மா எனும் படத்தில் அறிமுகமானார் துருவ் விக்ரம். ஆனால், ஆரம்பத்திலேயே அவருக்கு பெரிய அடி சினிமாவில் விழுந்தது.

அப்பாவுடன் இணைந்து
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு சியான் விக்ரம் நடித்த மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார் துருவ் விக்ரம். வெறித்தனமான நடிப்பை காட்டி மிரட்டினாலும், அந்த படம் தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில், பெரிதாக எடுபடவில்லை.

மிஸ்ஸான மாரி செல்வராஜ் படம்
மகான் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், அதற்கு நடுவே உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்த நிலையில், துருவ் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் படம் துவங்காமலே நின்று போனது.

ஜொலிக்காத ஆல்பம் பாடல்
சினிமா வாய்ப்புகள் துருவ் விக்ரமை தேடி குவியாத நிலையில், தானே சொந்தமாக மனசே எனும் ஆல்பம் பாடலை இயக்கி நடித்திருந்தார். ஆனால், தமிழ் சினிமா ரசிகர்கள் அந்த பாடலை பெரிதாக கொண்டாடவில்லை. மேலும், ஒரு காயம் என்கிற இன்னொரு பாடலும் அவர் நடிப்பில் உருவானது.

அடுத்த படத்திற்கு ரெடி
இந்நிலையில், அடுத்து துருவ் விக்ரம் எந்த படத்தில் நடிக்க உள்ளார் என்கிற கேள்வி பலமாக எழுந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம் பாடி உடம்புடன் ஒரு போட்டோவை போட்டு அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறேன் என்கிற அப்டேட்டை கொடுத்துள்ளார். விரைவில், அது என்ன படம் யார் இயக்குகிறார் போன்ற தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











