Thangalaan 2: தங்கலான் 2 ரெடியாகப் போகுதா?.. சியான் விக்ரம் தாங்குவாரா?.. ப்ளூ சட்டை மாறன் ஷாக்!
சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. முதல் நாளில் உலகம் முழுவதும் அந்த படம் 26.44 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், உலகம் முழுவதும் சியான் விக்ரமுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

அதன் விளைவாக தமிழ்நாட்டை தாண்டி உலகம் முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்த நிலையிலும், 2ம் நாளிலும் நல்ல வசூல் செய்து 50 கோடி ரூபாயை 2 நாட்களில் அந்த படம் கடந்துள்ளதாக கூறுகின்றனர்.
முதல் வாரத்திலேயே 100 கோடி: தனுஷின் ராயன் படத்தின் வசூலை எல்லாம் நொடிப் பொழுதில் பீட் செய்து இந்த ஆண்டு இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூலை தங்கலான் பெறுமா? என்கிற எதிர்பார்ப்பு சியான் விக்ரம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதல் வாரத்திலேயே 100 கோடி வசூலை தங்கலான் அள்ளுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. விஜய், அஜித் படங்கள் 200 கோடி பாக்ஸ் ஆபிஸை தாண்டுவது போல சியான் விக்ரம் நடித்த இந்த படம் தாண்டுமா? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
புத்தரும் யானை மலையும்: புத்தர் சிலையின் தலையை வெட்டி எறிவதும், புத்தர் சிலை கிடைத்ததும் சியான் விக்ரம் யானை மலையை காண்பதுமாக விநாயகர் பிறந்ததே இப்படித்தான் என்பதை மறைமுகமாக அரசியல் கலந்து பா. ரஞ்சித் சொல்லியிருப்பதாக சோஷியல் மீடியா முழுவதும் இந்த படம் குறித்து விவாதங்கள் வெடித்து வருகின்றன.
சூப்பர் படம்.. குப்பை படம்: ஜிகர்தண்டா படத்தில் முதல் சீனில் வருவது போல ஒரு படத்தை ஒரு தரப்பினர் சூப்பர் படம் என கொண்டாடுவார்கள், இன்னொரு தரப்பினர் குப்பை படம் என சொல்வார்கள். அதே போன்ற விமர்சனங்கள் தங்கலான் படத்துக்கும் குவிந்து வருவது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. பா. ரஞ்சித்தின் அரசியல் திணிப்பை ஒரு தரப்பினர் பாராட்டியும், அது தான் படத்திற்கு பாதகமாக அமைந்துள்ளது என ஒரு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

தங்கலான் 2: தமிழ்நாட்டை போலவே தெலுங்கிலும் தங்கலான் படம் மிகப்பெரிய அளவு வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில், 2ம் நாளான நேற்றே ஹைதராபாத்துக்கு கிளம்பிச் சென்ற தங்கலான் டீம் வெற்றி விழாவை அங்கே கொண்டாடினார்கள். அப்போது பேசிய சியான் விக்ரம் தங்கலான் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் மேலும், சில பாகங்கள் உருவாகும் என்றும் கூறியுள்ளார். அதை ஷேர் செய்து, மேலும், சில பாகங்கள் வருமா? என ப்ளூ சட்டை மாறன் ஷாக் ஆகியுள்ளார்.
ஆஸ்கருக்கு அனுப்புவோம்: ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் சிஇஓ தனஞ்செய்ன் கண்டிப்பாக தங்கலான் படத்தை ஆஸ்கர் விருது விழா வரை அனுப்புவோம் என நேற்று நடைபெற்ற விழாவில் பேசியுள்ளார். தங்கலான் படத்தைத் தொடர்ந்து கங்குவா படமும் மிகப்பெரிய வெற்றிப் படமாக ஸ்டூடியோ க்ரீனுக்கு அமையும் என பேசிய விக்ரம், வா வாத்தியார் படமும் லைன் அப்பில் உள்ளது எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











