நான் அப்படி ஆனதற்கே தனுஷ்தான் காரணம்.. ஓபனாக ஒத்துக்கொண்ட டான்ஸ் மாஸ்டர்
சென்னை: தனுஷ் கடைசியாக நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியும், நடித்தும் முடித்தார். அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தச் சூழலில் தனுஷ் குறித்து நடன அமைப்பாளர் பாபா பாஸ்கர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
இந்திய அளவில் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட்டாக சம்பவம் செய்யும் அவர் கடைசியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் வழக்கம்போல் தனுஷ் தனது கேரக்டரை மிகச்சிறப்பாக செய்தார். ஆனால் தனுஷ் ரசிகர்களுக்கு சோகம் என்னவென்றால்; போட்டியாக களமிறங்கிய அயலான் திரைப்படத்திடம் கேப்டன் மில்லர் தோற்றதுதான். இருந்தாலும் மில்லரில் விட்டதை அடுத்த படத்தில் அவர் பிடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

ராயன்: நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் கலக்கும் தனுஷ் தனது 50ஆவது படமான ராயன் படத்தை தானே இயக்கியிருக்கிறார். ஜூலை 26ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே பவர் பாண்டி படத்தில் ஒரு இயக்குநராக வென்று காட்டிய தனுஷ்; ராயனிலும் அதனை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
நேற்று ஆடியோ லான்ச்: ராயன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் தனுஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். முக்கியமாக தன்னை சுற்றி தொடர்ந்து பரப்பப்படும் வதந்திகளுக்கு பதில் சொல்லும்வகையில் இருந்தது தனுஷின் பேச்சு. அதனை அவரது ரசிகர்கள் ரொம்பவே ரசித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் குறித்து நடன அமைப்பாளர் பாபா பாஸ்கர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.

பாபா பாஸ்கர்: அவர் கொடுத்த பழைய பேட்டி ஒன்றில், "நான் 8ஆவது வகுப்பில் பாஸ் ஆனதற்கு தனுஷ்தான் காரணம். தேர்வு நேரத்தில் அவர் எனக்கு நிறைய சொல்லிக்கொடுத்திருக்கிறார். அதனால் படிப்பைப் பற்றி பெரிதாக நான் கவலைப்படமாட்டேன். விளையாட்டில் ஆர்வமாகிவிட்டேன். அதேபோல் டான்ஸ் க்ரூப்பில் இருந்த நான் இன்று ஒரு டான்ஸ் மாஸ்டராக ஆகியிருப்பதற்கும் தனுஷ்தான் காரணம்" என்றார்.
குபேரா, இளையராஜா: இதற்கிடையே ராயன் தவிர்த்து சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவரும் தனுஷ்; இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்கிறார். அந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க; கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார். அதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படி நடிப்பில் படுபிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார் தனுஷ்.


Click it and Unblock the Notifications











