Leo - கிறிஸ்தவத்தில் நரபலியா?.. அமைப்புகள் குரல் எழுப்பணும்.. லியோவுக்கு எதிராக வாள் சுழற்றும் பிரபலம்
சென்னை: Leo Controversy (லியோ விமர்சனம்) லியோ திரைப்படத்தில் வரும் நரபலி காட்சி குறித்து கிறிஸ்தவ அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும் என்று அந்தணன் தெரிவித்திருக்கிறார்.
விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தின் ரிலீஸை விஜய் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். டிக்கெட் விலை எவ்வளவாக இருந்தாலும் பரவாயில்லை என்று முதல் நாள் முதல் காட்சியை பார்த்தனர்.

சூப்பர் ரெஸ்பான்ஸ்: அப்படி பார்த்த விஜய் ரசிகர்களை படம் திருப்திப்படுத்தியிருக்கிறது. விஜய் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது சிறந்த ஃபெர்ஃபார்ம்களில் லியோவும் இடம் பிடிக்கும். பல காட்சிகள் மாஸாகவும் க்ளாஸாகவும் இருப்பதாக சிலாகிக்கின்றனர் விஜய் ரசிகர்கள். ஆனால் பொதுவான ரசிகர்களின் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர்.
ஒன்றுமே இல்லை: அவர்களோ, இந்தப் படம் பழைய கதைதான். அதை கண்ணுக்கு குளிர்ச்சியான லொக்கேஷனில் வைத்து படமாக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். பல லாஜிக் ஓட்டைகள், இரண்டாம் பாதியெல்லாம் சுத்தமாக எடுபடவில்லை. லோகேஷ் கனகராஜுக்கு முதல் சறுக்கலாக லியோ படம் அமைந்துவிட்டது என்றெல்லாம் ஓபனாக கமெண்ட்ஸை போட்டுவருகின்றனர்.
இது தேவையா?: அவர்கள் வைக்கும் முக்கியமான விமர்சனத்தில் ஒன்று நரபலி தொடர்பான காட்சி. படத்தில் சஞ்சய் தத் தனது இரு பிள்ளைகளில் ஒரு பிள்ளையை நரபலி கொடுக்க முடிவெடுப்பார். படத்தில் சஞ்சய் தத் ஒரு கிறிஸ்தவர். இந்தக் காட்சியை பார்த்த பலரும் இந்தியாவில் சிறுபான்மையின மதமாக கருதப்படும் கிறிஸ்தவத்தை ஏன் நரபலி கான்செப்ட்டுக்குள் இழுத்துவிட வேண்டும்.
நியாயமாக சொல்லப்போனால் இந்து மதத்தில்தான் அந்த நரபலி கொடுமையெல்லாம் அதிகம் இருக்கிறது. ஆனால் லோகேஷும், ரத்னகுமாரும் எந்த புரிதலின் அடிப்படையில் இப்படிப்பட்ட காட்சியை அமைத்தார்கள் என்ற விமர்சனங்கள் நேற்று மாலையிலிருந்தே சமூக வலைதளங்களில் காத்திரமாக முன்வைக்கப்பட்டுவருகின்றன.
அந்தணன் பேச்சு: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் வலைப்பேச்சு அந்தணன், "படத்தில் நரபலி விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். நியாயமாக பார்த்தால் கிறிஸ்தவத்தில் நரபலி இருக்கிறதா என்பது தெரியவில்லை. அவர்கள் பேய், பில்லி, சூனியம் போன்றவற்றை நம்புவார்கள். ஆனால் நரபலியை அவர்கள் நம்புவார்கள் என்று நான் படித்தது இல்லை. கிறிஸ்தவ அமைப்புகள் எல்லாம் குரல் எழுப்ப வேண்டும்.
அதேசமயம் நரபலி இந்து மதத்தில் இருக்கிறது. இங்கு சாமியார்கள் புதையல் எடுப்பதற்காக நரபலி கொடுப்பார்கள் என்று படித்திருக்கிறோம். சமீபத்தில்கூட சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. படத்தில் வில்லன்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கிறார்கள். ஆனால் பெற்ற பிள்ளைகளையே நரபலி கொடுக்கிறார்கள். இதையெல்லாம் கதை விவாதத்தில் அமர்ந்து எப்படி யோசித்தார்கள் என்றெல்லாம் தெரியவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











