உங்கள் டிரேட் மார்க் சிரிப்பை இனி எங்கே காண்பது? நெல்லை சிவா மரணம்.. பிரபலங்கள் உருக்கம்!
சென்னை: நகைச்சுவை நடிகர் நெல்லை சிவாவின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நெல்லை சிவா. தெருநெல்வேலி மாவட்டத்தில் 1952 ஆம் ஆண்டு பிறந்தார்.
1985 ஆம் ஆண்டு முதல் சினிமாத்துறையில் பணியாற்றி வருகிறார். 1985ஆம் ஆண்டு வெளியான ஆண்பாவம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நெல்லை சிவா.

நெல்லை ஸ்லாங்கில்
வெற்றிக் கொடிகட்டு, திருப்பாச்சி, அன்பே சிவம், நேர்முகம், ஜித்தன் 2, பதிலடி, ஆரம்பமே, அட்டகாசம் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நெல்லை ஸ்லாங்கில் இவர் பேசும் பேச்சுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

பாண்டியன் ஸ்டோர்ஸ்
திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் தடம் பதித்த நெல்லை சிவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து வந்தார். தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் தனது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

மாரடைப்பால் மரணம்
இந்நிலையில் நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கண்ணீர் அஞ்சலி
நெல்லை சிவாவின் மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது காமெடி காட்சிகளை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் கிருஷ்ணா
இதேபோல் பிரபலங்கள் பலரும் நெல்லை சிவா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கிருஷ்ணா பதிவிட்டுள்ள டிவிட்டில், சிறந்த நடிகர்களில் ஒருவரான அவருடன் பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவர் எப்போதும் எங்களுக்கு நகைச்சுவைகளை சொல்வதோடு குழுவையும் மகிழ்விப்பார். அய்யாவின் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

இனி எங்கே காண்பது?
இதேபோல் நகைச்சுவை நடிகர் சாம்ஸ் பதிவிட்டுள்ள டிவிட்டில் நெல்லை சிவா சாரின் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது. உங்கள் கஷ்டங்களை எல்லாம் கூட காமெடியாக சொல்வீர்களே. உங்களோடு குமுளியில் நடித்த நாட்கள் மறக்க முடியாதவை. நீங்கள் அடிக்கடி சிரிக்கும் டிரேட் மார்க் சிரிப்பை இனி எங்கே காண்பது? உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











