மரணம் கொடிது.. கொரோனா மரணம் கொடிதினும் கொடிது.. வைரமுத்து உட்பட திரைத்துறையினர் இரங்கல்!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திமுக எம்எல்ஏவான ஜெ அன்பழகன் கடந்த வாரம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள ரேலா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அன்பழகன்.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அரசியல் மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் வலம் வந்த அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கொடிதினும் கொடிது
கவிஞர் வைரமுத்து ஜெ அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கற்பா ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில்,
ஜெ.அன்பழகன் மறைவில் தன் வலக்கரம்
இழந்தார் தலைவர் ஸ்டாலின்.
செயல் சிங்கத்தை இழந்தது இயக்கம்.
உறுதிப்பொருள் உரைக்கும் உறுப்பினரை
இழந்தது சட்டமன்றம்.
என் நண்பரை இழந்தேன் நான்.
மரணம் கொடிது;
கொரோனா மரணம்
கொடிதினும் கொடிது.
ஆழ்ந்த இரங்கல்
இயக்கத்தார்க்கும்; இல்லத்தார்க்கும்.. என பதிவிட்டுள்ளார்.

ஆழ்ந்த இரங்கல்கள்
இதேபோல் பல்வேறு படங்களை இயக்கி நடித்துள்ள இயக்குநர் சேரனும் மறைந்த திமுக எம்எல்ஏவான ஜெ அன்பழகனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல்கள் அன்பழகன் அய்யாவுக்கு... என பதிவிட்டுள்ளார்.

அவர் ஒரு ரத்தினம்
இதேபோல் நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள டிவிட்டில், ஜெ அன்பழகன் நம்மை விட்டு சென்றுவிட்டார் என்பதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவர் ஒரு ரத்தினம். திமுகவில் நான் இருந்த 5 ஆண்டுகளிலும் அவரது கடின உழைப்பைக் கண்டேன். கேள்விகளை எழுப்பவும், நியாயத்தின் பக்கம் நிற்கவும் ஒருபோதும் பயப்படாத ஒருவர். ஏழை எளியவர்களுக்கு எப்போதும் உதவும் குணம் கொண்டவர். அவர் மிகவும் மிஸ் பண்ணப்படுவார். ஆழ்ந்த இரங்கல் அண்ணா என பதிவிட்டுள்ளார்.

அமைதியாக ஓய்வெடுங்கள்
இதேபோல் இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் ஜெ அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், அவருடைய ஆன்மா அமைதியையும் காணட்டும்.. அமைதியாக ஓய்வெடுங்கள் சார் என பதிவிட்டுள்ளார்.

கட்சியில் தனித்துவமான ஒருவர்
இதேபோல் நடிகர் நிதின் சத்யா பதிவிட்டுள்ள டிவிட்டில், அவரைப் பற்றி நிறைய கேட்டிருக்கிறேன், நிறைய படித்திருக்கிறேன். கட்சியில் தனித்துவமான ஒருவர்.. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

தைரியமான நபர்
நடிகர் அருள்நிதி பதிவிட்டுள்ள டிவிட்டில், ரொம்பவே ஸ்ட்ரைட் ஃபார்வர்டு. சிறந்த மற்றும் தைரியமான நபர்... சிறு வயதிலிருந்தே எனக்கு அவரை தெரியும்.. அவர் (கருணாநிதி) தாத்தாவுக்கு பிடித்தவர்களில் ஒருவராக இருந்தார்.. அவரது கடைசி மூச்சு வரை மக்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தார்.. ஓய்வெடுங்கள் அங்கிள் என தெரிவித்துள்ளார்.

எண் நண்பர்..
இதேபோல் நடிகர் எஸ்வி சேகர் பதிவிட்டுள்ள டிவிட்டில் என் நண்பர் ,சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ.அன்பழகன் மறைவுக்கு அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











