"ஸ்டாலின் ஆகிய நான்" என்று பதவியேற்றாலும்.. "நாம்" என்றுதான் நாடாளுவீர்கள்.. குவியும் வாழ்த்து!
சென்னை: முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு சினிமாத்துறையினர் போட்டி போட்டுக்கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக மட்டும் 130 இடங்களுக்கு மேல் வெற்றிக்கனியை பறித்துள்ளது.
இதனை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

போட்டி போட்டு
கொரோனா அச்சுறுத்தலால் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என தெரிவித்துள்ளார் ஸ்டாலின். இந்நிலையில் ஸ்டாலினுக்கு அரசியல் பிரபலங்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

"ஸ்டாலின் ஆகிய நான்"
இயக்குநர் லிங்குசாமி பதிவிட்டுள்ள ட்வீ ட்டில் "ஸ்டாலின் ஆகிய நான்" என்று சொல்லிப் பதவியேற்றாலும், "நாம்" என்றுதான் நாடாளுவீர்கள் நீங்கள்! ஸ்டாலின்.. நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகளுடன், -என்.லிங்குசாமி என குறிப்பிட்டுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கும் லிங்கு சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிறந்த ஆட்சியை எதிர்பார்க்கிறோம்
இதேபோல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், தமிழகத்தில் அற்புதமான வெற்றியை பெற்றுள்ள முக ஸ்டாலின் சார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சாருக்கு வாழ்த்துகள்.. எங்கள் அனைவரின் நலனுக்காக ஒரு சிறந்த ஆட்சியை எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாஸிட்டிவிட்டி..
இதேபோல் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், மதிப்புக்குரிய முதல்வர் ஸ்டாலினுக்கு பொழியும் வாழ்த்துக்களையும் வாழ்த்துக்களுக்கு அவர் அளிக்கும் பதில்களையும் பார்க்க ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தொற்றுநோய்களில் நமது மக்களின் முன்னேற்றத்திற்காக அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயல்படுவதை ட்வீட்டுகளில் முதல் முறையாக நான் காண்கிறேன்! இந்த பாஸிட்டிவிட்டி எப்போதும் இருக்கட்டும்! என பதிவிட்டுள்ளார்.

சமூக நீதியை நிலைநாட்ட
இதேபோல் இயக்குநர் பா ரஞ்சித்தும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கான, தங்களது தெளிவான நம்பிக்கையான தங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்! சாதி மத வேறுபாடுகளை கடந்து சமூக நீதியை நிலை நாட்ட தங்களது தலைமையிலான ஆட்சியில் சமரசமற்ற முன்னெடுப்புகள் அமைய வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











