நல்ல இதயம் நீங்கள்.. நிச்சயம் பூரண நலத்தோடு வருவீர்கள்.. விவேக்கிற்காக உருகும் பிரபலங்கள்!
சென்னை: நடிகர் விவேக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பிரபலங்கள் பலரும் அவர் விரைவிர் குணமடைய வேண்டும் என உருக்கமாக தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விவேக் நேற்று காலை திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

100% அடைப்பு
நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழுவினர், நடிகர் விவேக் உடல்நலக்குறைவுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தனர். விவேக் இதயத்தின் இடப்புற ரத்தக் குழாயில் 100% அடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

சோகத்தில் ரசிகர்கள்
மேலும் நடிகர் விவேக் இன்னும் ஆபத்தான நிலையில்தான் இருக்கிறார் என்றும் 24 மணிநேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து சொல்ல முடியும் என்றும் கூறியுள்ளனர். இதனால் விவேக்கின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பிரபலங்கள் உருக்கம்
ரசிகர்கள் பலரும் விவேக் விரைவில் குணம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதேபோல் திரைத்துறை பிரபலங்களும் நடிகர் விவேக் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
சின்ன கலைவாணர்
அந்த வகையில் நடிகர் மனோ பாலா பதிவிட்டுள்ள டிவிட்டில்,
என் அன்பு நண்பன் சின்ன கலைவாணர் விரைவில் குணமடைய பாபா துணையிருப்பார்...வாங்க விவேக் சார்.. என பதிவிட்டுள்ளார்.
நல்ல இதயம் நீங்கள்
இதேபோல் இயக்குநரும் நடிகருமான சேரன் பதிவிட்டுள்ள டிவிட்டில் சாலை தோறும் நிழல் தரவும், மரம் உருவாக்குவதற்கான அவசியம் அடுத்த தலைமுறை உணர்ந்திடவும், எண்ணில்லா முயற்சிகள் செய்த நல்ல இதயம் நீங்கள்... நிச்சயம் பூரண நலத்தோடு வருவீர்கள்.. நல்ல உள்ளங்கள் அனைவரின் பிரார்த்தனைகளால்... என பதிவிட்டுள்ளார்.
விரைவில் வாருங்கள்
நகைச்சுவை நடிகர் சதீஷ் பதிவிட்டுள்ள டிவிட்டில், விரைவில் நலம் பெறுங்கள் விவேக் சார் என பதிவிட்டுள்ளார்.
டியர் பிரண்ட்
நடிகை குட்டி பத்மினி பதிவிட்டுள்ள டிவிட்டில், என் டியர் ஃபிரண்ட் நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும். விவேக்ஜி இறைவனின் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு என்று பதிவிட்டுள்ளார்.
பூரண நலத்தோடு..
இதேபோல் இயக்குநர் சீனு ராமசாமி பதிவிட்டுள்ள டிவிட்டில் நீங்கள் தமிழகமெங்கும் நட்ட மரங்களோடு சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன். பூரண நலத்தோடு இல்லம் வருக விவேக் சார்.. என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











