அடகுக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற ஸ்டன்ட் நடிகர்கள் மூவர் கைது!
சென்னை: சென்னை அருகே அடகு கடை உரிமையாளரிடம் கொள்ளையடிக்க முயன்ற சினிமா ஸ்டண்ட் நடிகர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரவாயலில் அடகு கடை வைத்திருப்பவர் உக்கம்சந்த். அடகு நகைகளை மீட்டு மீண்டும் அதனை விற்றுத் தருவது இவர் வேலை. இது தொடர்பாக பத்திரிகைகளிலும் உக்கம் சந்த் விளம்பரம் கொடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வடபழனியிலிருந்து போனில் தொடர்பு கொண்ட ஒருவர் தனது நகையை மீட்டு தருமாறு உக்கம்சந்திடம் கேட்டுள்ளார். உடனே அங்கு சென்ற உக்கம் சந்த் நகையை மீட்டுக் கொண்டு திரும்பினார். பின்னர் மற்றொரு போன் வந்தது. மதுரவாயலில் இருந்து பேசுவதாகவும், கோயம்பேடு பஸ் நிலையம் வந்தால் நகையை மீட்க அழைத்து செல்வதாகவும் உக்கம் சந்திடம் தெரிவித்துள்ளார் அந்த நபர்.
அவர் கூறியபடி உக்கம் சந்தும் அந்த இடத்துக்கு வந்துள்ளார். அவரை தங்கள் பைக்கில் ஏற்றிக் கொண்டு போனவர்கள், சிறிது தூரம் சென்றதும் கத்தியைக் காட்டி மிரட்டி உக்கம்சந்த் கையில் இருந்த ரூ. 2 லட்சத்தை பறிக்க முயன்றனர். அவர்களிடமிருந்து பணப்பையை பிடுங்கிக் கொண்டு உக்கம் சந்த் ஓட்டம் பிடித்தார்.
அப்போது போலீசார் எதிரே வந்த போலீசாரிடம் விஷயத்தைச் சொல்லி, காப்பாற்றுமாறு கதறினார்.
உடனே ராஜூ (வயது 32) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜசேகர் அவரிடம் விசாரணை நடத்தியதில், கார்த்திக் (வயது 30), முருகன் (வயது 34) ஆகிய தனது கூட்டாளிகளையும் காட்டிக் கொடுத்தார். உக்கம்சந்தின் விளம்பரம் பார்த்துதான் தாங்கள் இப்படிச் செய்ததாகக் கூறினர்.
மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Click it and Unblock the Notifications











