Actor Dhanush :தனுஷின் அடுத்தடுத்த படங்கள்.. வேல்ராஜ் என்ன சொல்லியிருக்காருன்னு பாக்கலாங்களா!
சென்னை : நடிகர் தனுஷ் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் படங்கள் ரிலீசாகின.
இந்தப் படங்களில் திருச்சிற்றம்பலம் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. சிறப்பான விமர்சனங்களையும் பெற்றது. படத்தில் நித்யா மேனனுடன் இணைந்து தனுஷ் நடித்திருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான வாத்தி படம் மிகச்சிறப்பான வெற்றியையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

நடிகர் தனுஷ் : நடிகர் தனுஷ் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். பாய் நெக்ஸ்ட் டோர் லுக்கில் இருந்தாலும் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு டோலிவுட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபத்தில் வெளியான வாத்தி படம், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகி சிறப்பான வசூலை குவித்துள்ளது. தெலுங்கில் இந்தப் படம் சார் என்ற பெயரில் வெளியானது.

கல்வியின் முக்கியத்துவத்தை பேசிய இந்தப் படத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்திருந்தார். இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய 50வது படத்தை தனுஷ் இயக்கவுள்ளார்.
டி50 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் சூட்டிங், விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இந்தப்படம் திட்டமிடப்பட்டுள்ளதாக ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் தனுஷ் -வெற்றிமாறன் இணையவுள்ள படம் குறித்தும் அவர் அப்டேட் தெரிவித்துள்ளார்.
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணையும் படம் சர்வதேச தரத்தில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து இன்னும் 4 மாதங்களில் விடுதலை 2 படத்தையும் சூட்டோடு ரிலீஸ் செய்ய வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். இதன் வேலைகளை தற்போது முடுக்கி விட்டுள்ளார். இரண்டாவது பாகத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 10 நாட்கள் சூட்டிங் மீதமுள்ளதாகவும், அதையும் விரைவில் எடுத்து முடிக்கவும் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவுடன் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளதாகவும் இதையடுத்து தனுஷுடன் வடசென்னை 2 படத்தின் வேலைகளை துவக்கவுள்ளதாகவும் அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். முன்னதாக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி வேறொரு படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அடுத்தது தனுஷுடன் வடசென்னை 2 படம்தான் என்று வெற்றிமாறன் உறுதியளித்துள்ளார். இந்தப் படம்குறித்துதான் தற்போது வேல்ராஜ் அப்டேட் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











