மிகுந்த வேதனை அடைந்தேன்.. நண்பர் அஜித்துக்கு ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்
சென்னை: நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலை காலமானார். இந்த செய்தி வெளியாகியதையடுத்து திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த இரங்கல்: அதே போல எடிப்பாடி பழனிச்சாமியும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும் , கார் பந்தய வீரருமான சகோதரர் அஜித் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திருமதி. மோகினி மணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
கமல் இரங்கல்: மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அன்புத் தாயை இழந்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆன்மா சாந்தியடையட்டும்: பாஜக அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications