டெல்லியில் முதலமைச்சர் விஜய்.. இந்த 7 விஷயங்கள் தான் மேட்டரே.. முதல் பயணமே தாறுமாறா இருக்கே!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அரசுமுறைப் பயணமாக தலைநகர் டெல்லிக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. இந்த பயணத்தில் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட இருவரைச் சந்தித்து தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மிக முக்கியமான ஏழு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரிவான தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது, பிரதமரைச் சந்தித்து, மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது என்றும், உள்துறை அமைச்சகத்தால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது என்றும், இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப்பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO) ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை (CABS) தமிழ்நாட்டில் அமைக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக மாண்புமிகு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பிற்கும், மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது என்றும், இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும், மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்காணும் திட்டத்தினை அனுமதிக்கக் கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்திற்கும், மத்திய நீர்வள ஆணையத்திற்கும் அறிவுறுத்துமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
மீனவர்கள்: மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளது என்றும், 2026 ஆம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும், தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளனர் என்றும், 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்து, மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொண்டார் என்று தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

நிதியமைச்சர்: அதேபோல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன் வைத்த கோரிக்கைகள், " விரைவான வளர்ச்சியைப் பெற்றுவரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்றும், இத்தகைய வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இன்றியமையாதது என்பதால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
கல்விக்கு: தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை (Institutes of National Importance) தமிழ்நாட்டில் நிறுவிடவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ இரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்" என்று தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications