ஸ்டாலினை சந்தித்த விஜய்.. ரஜினிக்கு மட்டும் ட்விட்டர் நன்றி ஏன்?.. அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள்!
சென்னை: தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய், தன்னை வாழ்த்திய திரையுலக முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகியோருக்கு சமூக வலைதளத்தில் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மே 4ஆம் தேதி ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் "நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்" என பதிவிட்டிருந்தார். அந்த பதிவு அரசியல் வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிக கவனம் பெற்றது.

ரஜினிகாந்த் வாழ்த்து: இந்த நிலையில், இதுவரை அதற்கு பதில் அளிக்காமல் இருந்த முதல்வர் விஜய், இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி என குறிப்பிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதேபோல், மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசனும் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த விஜய்,மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினருமான திரு கமல் ஹாசன் அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்.
முதல்வர் நன்றி: முன்னதாக நேற்று முதல்வர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ மற்றும் சீமான் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனால் அடுத்ததாக ரஜினிகாந்தையும் நேரில் சந்திப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது வரை நேரடி சந்திப்பு நடைபெறாத நிலையில், சமூக வலைதளம் மூலமாகவே விஜய் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதன் மூலம், அரசியல் பயணத்தின் புதிய கட்டத்தில் திரையுலகின் இரண்டு பெரிய நட்சத்திரங்களுடனும் விஜய் நல்லுறவை பேண விரும்புகிறார் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications