காக்டெய்ல் 2 படத்தில் தன் பாலின ஈர்ப்பாளராக ராஷ்மிகா மந்தனா? ரிலீஸ்க்காக எகிறும் எதிர்பார்ப்பு
மும்பை: ஷாஹித் கபூர், கீர்த்தி சனோன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காக்டெய்ல் 2'. இந்தப் படத்தில் கீர்த்தியும் ராஷ்மிகாவும் லெஸ்பியன் (ஒரே பாலின) காதலர்களாக நடித்துள்ளனர் என்று இணையத்தில் சில வதந்திகள் பரவின. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ஷாஹித் கபூர், இயக்குநர் ஹோமி அதாஜானியா, தயாரிப்பாளர்கள் தினேஷ் விஜன் மற்றும் லவ் ரஞ்சன் ஆகியோர் இந்த வதந்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளனர். இது ஒரு சிக்கலான முக்கோண காதல் கதையே தவிர, ஒரே பாலின காதல் கதை அல்ல என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த வதந்தி எப்படி பரவியது என்பது குறித்து இயக்குநர் ஹோமி அதாஜானியா பேசுகையில், படப்பிடிப்பு தளத்தில் சும்மா பேசிக்கொண்டிருந்த போது உருவான யோசனை தான் இது என்றார். "கீர்த்தியும் ராஷ்மிகாவும் நிஜ வாழ்க்கையில் நல்ல தோழிகள். அவர்கள் நெருக்கமாக பழகுவதைப் பார்த்து, 'ஒருவேளை இவர்கள்தான் காதலர்கள், ஷாஹித் கபூர் இவர்களுக்கு இடையே வரும் மூன்றாவது நபர் என்று கதை இருந்தால் எப்படி இருக்கும்?' என ஜாலியாக பேசினோம். அதை யாரோ சீரியஸாக எடுத்துக்கொண்டு வதந்தியை கிளப்பிவிட்டனர்," என்று கூறினார்.
விழாவில் இதுபற்றி கேள்வி கேட்டபோது, கீர்த்தி சனோன் சிரித்துக்கொண்டே ஷாஹிதை பார்த்து, "இந்த வதந்தி எங்கிருந்து கிளம்புகிறது என்று எனக்குத் தெரியும்" என கிண்டல் செய்தார். அதற்கு ஷாஹித் கபூர் அதிர்ச்சியாவது போல் நடித்து, "நான் ஏன் அப்படி சொல்லப்போகிறேன்? இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை," என கலகலப்பாகப் பதிலளித்தார்.
'பழைய காதல்' மற்றும் 'புதிய காதல்': தயாரிப்பாளர் தினேஷ் விஜன் படம் பற்றி கூறுகையில், "இந்தத் திரைப்படத்தில் இரண்டு விதமான காதல் கதைகள் உள்ளன. ஒன்று 'பழைய காதல்' (Purana love), மற்றொன்று 'புதிய காதல்' (Naya love). இதைத் தவிர வேறு எந்தக் காதலும் படத்தில் இல்லை," என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பெண்களின் நட்பு குறித்த கீர்த்தி சனோனின் ஆதங்கம்: கீர்த்தியும் ராஷ்மிகாவும் ஜிம்மில் ஒன்றாக உடற்பயிற்சி செய்யும்போது எப்படி தங்களுக்குள் நட்பு உருவானது என்பதைப் பகிர்ந்துகொண்டனர். அப்போது ஷாஹித் கபூர், "உங்கள் இருவருக்குள் இருக்கும் இயல்பான கெமிஸ்ட்ரி தான் மக்கள் இப்படி நினைக்கக் காரணமோ?" என்று ஜாலியாகக் கேட்டார்.அதற்கு கீர்த்தி சனோன் சற்றே ஆதங்கத்துடன் பதிலளித்தார்:
"இரண்டு ஆண்கள் நெருக்கமாக இருந்தால் அதை 'ப்ரோமன்ஸ்' (Bromance) என்று சமூகம் எளிதாக ஏற்றுக்கொள்கிறது. ஆனால், இரண்டு பெண்கள் நெருங்கிய தோழிகளாக இருந்தால், அதை யாராலும் நம்ப முடிவதில்லை. அவர்களுக்குள் ஒன்று சண்டை இருக்க வேண்டும், இல்லையென்றால் வேறு ஏதேனும் இருக்க வேண்டும் என்று தவறாகவே பார்க்கிறார்கள்," என்று சமூகத்தின் பார்வையை சாடினார்.
'காக்டெய்ல் 2' திரைப்படம் ஒரு புதுமையான முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ளது. வதந்திகள் அனைத்திற்கும் படக்குழு விளக்கம் அளித்துவிட்டதால், வரும் ஜூன் 19-ஆம் தேதி படம் திரைக்கு வரும்போது திரையில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தின் புரோமோசன் வேலைகள் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications