Ajithkumar: ரேஸில் வென்ற அஜித்குமார்.. ஒரே போஸ்ட்டில் டிடிஎஃப் வாசனுக்கு பளார் விட்ட கோவை காவல்துறை!
சென்னை: நடிகர் அஜித்குமார் சினிமாவில் மட்டும் இல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் பலருக்கு முன் உதாரணமான மனிதராக திகழ்ந்து வருகின்றார். ஒரு விஷயத்தை அஜித் செய்கின்றார் என்றால் அதில் தன்னால் எந்த அளவுக்கு நியாயமாக இருக்க முடியுமோ அந்த அளவுக்கு நியாயமாக இருக்கக்கூடியவர். அரசுக்கு வரி செலுத்துவது தொடங்கி, வரிசையில் நின்று வாக்கு செலுத்துவது வரை அவரது நடவடிக்கையில் எந்தவிதமான பிரபல முன்னிலைத்துவம் இருந்தது கிடையாது. வீன் விளம்பரத்தை விரும்பாத நடிகர். கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்ட இவர், துபாயில் நடைபெற்ற 24மணி நேர கார் ரேஸ் பந்தயத்தில் 3-வது இடம் பெற்று அசத்தினார். இதனால் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், சாலைகளில் சாகசம் செய்கின்றேன் என விபத்துகளை ஏற்படுத்தும் இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல்துறை நச் போஸ்ட் ஒன்றைப் போட்டுள்ளது.
நடிகர் அஜித்குமாருக்கு சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், கார் ரேஸ், பைக் ரேஸ், பைக்கில் பல நாடுகளைச் சுற்றுவது, புகைப்படங்கள் எடுப்பது, துப்பாக்கிகளை இயக்குவது அதாவது துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வது, சிறிய ரக விமானங்களை இயக்குவது, அது தொடர்பாக மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது, பிரியாணி சமைத்து பரிமாறுவது என இவரது ஹாபிகள் ரொம்பவும் அதிகம். ரொம்பவுமே கமிட்டடான மனிதர். இப்படியான அஜித்குமார், தற்போது சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல விலகி சென்று, சிறுவயது முதல் தனது கனவான கார் ரேஸில் கலந்து கொண்டு, வெற்றியும் பெற்றுள்ளார்.

கார் ரேஸ் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், அவர் பயிற்சி மேற்கொண்டு இருந்தபோது அவரது, கார் பெரும் விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக அந்த கோர விபத்தில் அஜித்குமாருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அந்த விபத்தில் இருந்து மீண்டு வந்துதான், அவரது அணி மூன்றாவது இடத்தினை வென்றுள்ளது.
வாழ்த்து: அஜித்க்கு தமிழ் திரையுலகினர், அரசியல்வாதிகள், ரசிகர்கள் தொடங்கி, இந்தியா முழுவதில் இருந்தும் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வெற்றி பெற்ற அந்த தருணத்தில், அஜித் தனது அணியினருடன் கத்தி ஆரவாரம் செய்தார். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். அவருக்கு துபாயில் இருக்கும் மிகவும் முக்கியமான நபர்கள் வாழ்த்து தெரிவித்தது மட்டும் இல்லாமல், பாராட்டவும் செய்தனர்.

மீம்: இப்படியான நிலையில் கோவை மாவட்ட மாநகரக் காவல்துறை அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இது மட்டும் இல்லாமல், சாலைகளில் சாகசம் செய்கின்றேன் என வீணாக விபத்துகளை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையும் அறிவுரையும் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் ஒரு நச் பதிவினை பதிவிட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் கோவை மாநகர காவல்துறை சிறப்பான மீம் ஒன்றைப் பகிர்ந்துள்ளது.
டிடிஎஃப் வாசன்: அதாவது அதில், " திறமை இருந்தா அவரை மாதிரி, களத்துல போயி ஜெயிச்சு முன்னேற பாரு. அத விட்டுட்டு ரோட்ல சாகசத்தைக் காட்டுறேன்னு கேஸ் வாங்கிட்டு கிடக்காத" என பதிவிட்டுள்ளது. கோவை மாநகர காவல்துறையின் இந்த பதிவு, கோவை மாவட்டத்தில் விபத்தை உண்டாக்கும் வகையில் பைக்குகளை ஓட்டும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கத்தான் எனவும், கோவை மாவட்டத்தினைச் சேர்ந்தவராக டிடிஎஃப் வாசன் போன்றவர்களுக்குத்தான் எனவும் பலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











