ஹீரோவாக அறிமுகமாகும் கோமாளி பட இயக்குனர்!
சென்னை : ஜெயம் ரவியின் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற கோமாளி திரைப்படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார்.
முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.
இந்த நிலையில் இவரின் அடுத்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க பிரதீப் ரங்கநாதனே ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

100 நாட்களை வெற்றிகரமாக தொட்டது
1990களின் கால கட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் கோமாளி. எதிர்பாராத விதமாக கோமா ஸ்டேஜுக்கு செல்லும் ஒருவர் பின் சுய நினைவிற்கு வந்த உடன் 90களில் வாழ்ந்தது போலவே நினைத்துக் கொள்கிறார் என்பதை மிகவும் சுவாரசியமாகவும் காமெடி கலந்த படமாக வெளியானது கோமாளி. ஜெயம்ரவியின் அட்டகாசமான நடிப்பு யோகிபாபு டைமிங் காமெடி புத்தம் புதிய கதை களம் என அனைத்து சிறப்பம்சங்களும் கூடிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்று 100 நாட்களை வெற்றிகரமாக தொட்டது .

விக்ரம் ஹீரோவாக
கோமாளி வெற்றியைத் தொடர்ந்து அதன் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் அவரது அடுத்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதில் விக்ரம் ஹீரோவாக நடிப்பதாகவும் ஐசாரி கணேஷ் அப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக
ஆனால் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின் படி பிரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கும் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் இந்த படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கோமாளி படத்திற்கு முன்பாகவே பல குறும்படங்களை இயக்கி அதில் நடித்தும் இருந்த பிரதீப் இப்பொழுது புதிய படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாகவும் அறிமுகமாகிறார்.

கோலிவுட்டில் பரபரப்பு
அடுத்தது முன்னணி ஹீரோவை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் சர்ப்ரைஸாக அடுத்ததாக இயக்கும் திரைப்படத்தில் பிரதீப் ஹீரோவாக நடிக்க இருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











