Bava Lakshmanan - பாவா லட்சுமணனுக்கு கால் கட்டை விரல் அகற்றம்.. உதவி செய்வாரா வடிவேலு?
சென்னை: Bava Lakshmanan (பாவா லட்சுமணன்) வடிவேலுவுடன் பல காமெடி காட்சிகளில் நடித்த பாவா லட்சுமணனுக்கு சர்க்கரை நோய் காரணமாக கால் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளது.
முன்னணி காமெடி நடிகரான வடிவேலுவுக்கென்று தனி டீம் ஒன்று இருந்தது. அந்த டீமில் அல்வா வாசு, சிங்கமுத்து, பாவா லட்சுமணன், போண்டா மணி என பலர் இருப்பார்கள். இவர்களில் சிங்கமுத்துவுக்கும் வடிவேலுவுக்கும் முட்டிக்கொண்டது. அல்வா வாசு உயிரிழந்துவிட்டார். போண்டா மணி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இப்போதுதான் மீண்டிருக்கிறார். பாவா லட்சுமணனும் முன்னர் போல் படங்களில் அதிகம் நடிப்பதில்லை.

பாவா லட்சுமணன்: வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து காமெடியில் கலக்கியவர் பாவா லட்சுமணன். குறிப்பாக மாயி படத்தில் வடிவேலு பெண் பார்க்க செல்லும் காட்சியில் பெண்ணின் தந்தையாக, 'வா மா மின்னலு' என்ற வசனத்தின் மூலம் வெகு பிரபலமடைந்தார் பாவா லட்சுமணன். அதேபோல் ஏய் படத்திலும் வடிவேலுவுடன் அவர் செய்த அதகளங்கள் இன்றுவரை சிரிப்பு வரவைக்கும் ரகம்.
கவிதை சொன்ன பாவா: வடிவேலுவுடன் இணைந்து நடித்து மட்டும் பாவா லட்சுமணன் பிரபலமாகவில்லை. லிங்குசாமியின் முதல் படமான ஆனந்தம் படத்தில் அரிசி நீ என்னை தினமும் தரிசி என கவிதை சொல்லும் காட்சியின் மூலமும் பிரபலமடைந்தார். அந்தப் படத்தில் காமெடி காட்சிகளில் மட்டுமின்றி குணசித்திர வேடத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பாவா.
சந்தானத்துடன்: அதேபோல் பல நாட்களுக்கு பிறகு அவரை வெகுஜனத்திடம் கொண்டுபோய் சேர்த்த படம் சந்தானத்துடன் அவர் இணைந்து நடித்த கலகலப்பு படம். அப்படத்தில் அஞ்சலியை துரத்தி செல்லும் காட்சியில் வாத்தியாரே நான் முன்னாடி போயி உட்கார்ந்துக்கவா தூக்கி தூக்கி போடுது என வசனம்பேசும் இடத்தில் அவரது பாடி லாங்குவேஜையும், டயலாக் டெலிவிரி ஸ்டைலையும் வைத்து பயங்கரமாக சிரிக்க வைத்தவர்.

உடல்நலக்குறைவு: இப்படி பல முறை ரசிகர்களை சிரிக்க வைத்தவரின் வாழ்க்கை சமீபகாலமாக சோகத்தில் இருக்கிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் பட வாய்ப்பே இல்லாமல் இருந்தது. அதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில்கூட கூறியிருந்தார். இந்நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு கால் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளது. இதற்கான அறுவை சிகிச்சை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடந்தது.
உதவுவாரா வடிவேலு: பட வாய்ப்புகள் ஏதுமின்றி பொருளாதார ரீதியாக நொடிந்து போயிருக்கும் பாவா லட்சுமணன் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்தவர். எனவே வடிவேலு பாவா லட்சுமணனை நேரில்கூட சந்திக்க வேண்டாம். அவரை தொலைபேசியிலாவது தொடர்புகொண்டு அவருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்பது பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. அதுமட்டுமின்றி தன்னுடன் நடித்தவர்களை வடிவேலு கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. எனவே அந்த அவப்பெயரை துடைக்கும் விதமாக பாவா லட்சுமணனுக்கு வடிவேலு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











