Bonda Mani death: பாக்கியராஜ் படம் முதல் பிக் பாஸ் பாலா படம் வரை நடித்த போண்டா மணி காலமானார்!
சென்னை: நகைச்சுவை நடிகர் போண்டா மணி நேற்று இரவு தனது வீட்டில் திடீரென கீழே விழுந்ததில் மூச்சுப் பேச்சு இல்லாமல் மயங்கி விட்டார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்ற நிலையில், போண்டா மணி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பாக்கியராஜ் நடிப்பில் வெளியான பவுனு பவுனுதான் படத்தில் அறிமுகமான போண்டா மணி சமீபத்தில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடித்த வா வரலாம் வா படம் வரை நடித்துள்ளார். வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்த பல காமெடி காட்சிகள் ரசிகர்களை எந்த காலத்திலும் சிரிக்க வைக்கும்.

இரு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போண்டா மணிக்கு பல பிரபலங்கள் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வந்தனர். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பி ஓய்வில் இருந்து வந்த போண்டா மணி திடீரென உயிரிழந்தது திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
போண்டா மணி மரணம்: தமிழ் சினிமாவில் சுமார் 270 படங்களில் துணை காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் போண்டா மணி. கிட்னி செயலிழந்த நிலையில், சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனது மருத்துவ செலவுக்கு உதவுமாறு பல நடிகர்களிடம் அவர் கோரிக்கை வைத்து வந்த நிலையில் ரஜினிகாந்த், தனுஷ், விஜய்சேதுபதி, மயில்சாமி உள்ளிட்ட பலர் அவருக்கு பணம் கொடுத்து உதவினர். சிகிச்சை முடிந்து சரியாகி விடுவார் என குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று பத்திரமாக பார்த்து வந்த நிலையில், நேற்று இரவு திடீரென மயங்கி விழுந்து அவரது உயிர் பிரிந்து விட்டது.
பாக்கியராஜ் முதல் பாலா படம் வரை: இலங்கையை சேர்ந்த போண்டா மணி பாக்கியராஜ் நடிப்பில் வெளியான பவுனு பவுனுதான் படத்தில் தான் ஒரு சிறிய வேடத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முத்து, முறை மாப்பிள்ளை, பாரதி கண்ணம்மா, ரன், சுந்தரா டிராவல், வசீகரா, வின்னர், திருமலை, ஐயா, சச்சின், தாமிரபரணி, குசேலன், படிக்காதவன், வேலாயுதம், ஸ்ட்ரைக்கர் மற்றும் இந்த ஆண்டு வெளியான பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடித்த வா வரலாம் வா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் போண்டா மணி.
கவுண்டமணி போல: இலங்கையில் இருந்து சினிமா கனவுடன் சென்னைக்கு வந்த கேத்தீஸ்வரன் தினமும் பசிக்கு சாப்பாடு சாப்பிடும் அளவுக்கு காசு இல்லாத நிலையில், ஒரு போண்டாவை வாங்கிக் கொண்டு அதையே உணவாக பல நாட்கள் தின்று வாழ்ந்து வந்துள்ளார். சினிமாவில் இவர் அறிமுகம் ஆகும் போது, கேத்தீஸ்வரன் என்கிற பெயரை மாற்ற வேண்டும் என சொல்லும் போது தனது குருநாதர் கவுண்டமணி எப்படி தனது பெயரை கவுன்ட்டர் மணி என மாற்றிக் கொண்டாரோ அதே போல போண்டா மணி என மாற்றிக் கொள்வோம் என மாற்றிக் கொண்டார்.
பிரபலங்கள் இரங்கல்: போண்டா மணி மருத்துவமனையிலேயே இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், பலரும் உதவி செய்ய முன் வந்தனர். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவருக்கு அரசு சார்பாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குணமடைந்து வீடு திரும்பி விட்டார் என எதிர்பார்க்கப்பட்டு வந்து நிலையில், திடீரென அவர் உயிரிழந்தது சினிமா பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











