3 முறை ஆப்ரேஷன்.. மயில்சாமியை எச்சரித்த மருத்துவர்கள்.. உடைந்து அழுத போண்டா மணி!
சென்னை : மறைந்த நடிகர் மயில்சாமி 3 முறை இதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் என்று நடிகர் போண்டா மணி கதறி அழுதபடி கூறியுள்ளார்.
30 ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும்,குணச்சித்திர நடிகராகவும் இருந்த மயில்சாமி ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரின் இறுதிச்சடங்கு நேற்று வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு கண்ணீர் வடித்தனர்.

நடிகர் மயில்சாமி
தீவிர சிவ பக்தரான மயில்சாமி மகா சிவராத்திரியை முன்னிட்டு சனிக்கிழமை இரவு கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் நடந்த சிறப்பு பூஜையில் டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து விடிய விடிய பாட்டுப்பாடி உள்ளார். அதிகாலையில் பூஜையை முடித்துவிட்டு, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்த, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

தகனம் செய்யப்பட்டது
மயில்சாமியின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து,நேற்று காலை 10.30 மணி அளவில் மயில்சாமியின் உடலுக்கு சிவனடியார்கள் சிவபுராணம் பாடி மரியாதை செலுத்தினர். பின் சிவ வாத்தியம் இசைத்தபடி மயில்சாமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

3 முறை இதய ஆப்ரேஷன்
மின்மயானத்தில் கண்கலங்கியபடி இருந்த போண்டா மணி ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், மயில்சாமியின் இழப்பு யாராலும் ஈடுசெய்ய முடியாத இழப்பு, நல்ல காமெடியன். அவர் இறந்தது ஆண்டவனுடைய அமைப்பு என்று தான் சொல்லவேண்டும். அவர் 3 முறை இதய ஆப்ரேஷன் செய்திருக்கிறார். ஆனாலும் டாக்டர் சொன்னதை கேட்க மாட்டார். ரெஸ்ட் எடுங்கணு சொன்னா கேட்கமாட்டார். இருக்குற வரைக்கும் மக்களுக்கு நல்லது பண்ணணும் என்று தான் சொல்லுவார்.

ஓடிவந்து உதவி செய்தார்
நான் நான்கு மாசமாக மருத்துவமனையில் இருந்த போது ஓடோடி வந்து உதவி செய்தார். டாக்டர்களை சந்தித்து, போண்டா மணி சிலோனில் இருந்து வந்தவன், அவனை எப்படியாவது காப்பாத்துங்க என்றார். என் கையில ஒரு லட்சம் ரூபாயை கொடுத்து இத மருத்துவசெலவுக்கு வச்சிக்கோ என்றார். இது என்னுடைய காசு இல்ல. பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், சத்யராஜ், சரத்குமாரிடம் கேட்டு வாங்கிட்டு வந்தேன் என்றார்.

கதறி அழுத போண்டா மணி
எப்போ போனாலும் செலவுக்கு காசு கொடுப்பாரு. என்னோட கல்யாண விஷயத்திலேயும் உதவி பண்ணாரு. 6 மாதத்திற்குள் ஆபரேஷன் செய்யும்படி மருத்துவர்கள் சொல்லி இருக்காங்க, மயில்சாமி உடலை பார்க்கப்போன இடத்தில் என் உயிர் போயிருந்தால் கூட நன்றாக இருந்து இருக்கும் என்று போண்டா மணி கதறி அழுதபடி பேசினார்.


Click it and Unblock the Notifications











