Actor Charlie: நகைச்சுவை நடிகர் சார்லி பிறந்த நாள் இன்று.. குவியும் வாழ்த்து!
சென்னை: காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகர் சார்லி இன்று தனது 64வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இணையத்தில் நடிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி பக்கத்தில் உள்ள கோவில்பட்டியில் பிறந்த சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர். ஆசிரியரின் மகனான சார்லி ஆரம்பத்தில் ஆசிரியராகத்தான் ஆசைப்பட்டார். ஆனால் அவரை காலம் திரைத்துறைக்குள் இழுத்து விட்டது. ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் மீது இருந்த பற்றாலும் தனது பெயரை சார்லி என்று மாற்றிக்கொண்டார்.

நகைச்சுவை நடிகர் சார்லி: இயக்குநர் கே. பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமானார். நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும் கிட்டத்தட்ட 800 தமிழ் படங்களில் நடித்துள்ளார். அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்பட்ட சார்லி பெரும்பாலான திரைப்படங்களில் காமெடியானவே நடித்திருப்பார். ஆனால், சமயத்தில் தனக்கு கிடைக்கும் ஒரு சில குணச்சித்திர வேடத்தில் அசத்தி இருப்பார். குறிப்பாக வெற்றிக்கொடி கட்டு படத்தில் தான் ஏமாந்த கதையை கதறி அழுது மனோரமாவிடம் சொல்லும் காட்சியில் மனதை அப்படியே உருக வைத்துவிடுவார்.
அசத்தலான காமெடி: குணசித்திர கதாபாத்திரத்தில் தான் அப்படி என்றால், காமெடியில் பல திரைப்படங்களில் தெறிக்கவிட்டு இருப்பார். பிரண்ட்ஸ் படத்தில், காண்ட்ராக்டர் நேசமணி கதாபாத்திரத்தில் வடிவேலு கலக்கினார் என்றால், சார்லியும் கோபாலா தன் பங்குக்கு அசத்தி இருப்பார். அதே போல சூர்யா நடித்த உன்னை நினைத்து படத்தில் ஜோசியராக வரும் இவர், ஒரு லக்குனத்தில் ஒன்பது கிரஹங்களில் உச்சம் பெற்ற ஒருவர்... செல்போனில் பேட்டரி இல்லாமலும் பேசலாம் என்று காமெடி இன்று வரை அனைவருக்கும் பிடித்த காமெடியில் ஒன்றாக உள்ளது.
இன்று பிறந்த நாள்: திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சார்லி நகைக்சுவை நடிகராக மட்டுமில்லாமல், படிக்க முடியாமல், இருக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு சத்தமே இல்லாமல் பல உதவிகளை செய்து வருகிறார்.உலக இலக்கியங்கள், உலக சினிமா என அனைத்தையும் தனது விரல் நுனியில் வைத்திருக்கும் சார்லி இன்று தனது 64வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அவரது ரசிகர்கள் இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











