சின்னி ஜெயந்த் மகனுக்கு திருமணம்.. திரண்டு வந்து வாழ்த்திய பிரபலங்கள்!
சென்னை: நடிகர் மற்றும் மிமிக்ரியில் டாக்டர் பட்டம் பெற்ற சின்னி ஜெயந்த்தின் மகனான ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் பல திரைப்பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சின்னி ஜெயந்த். அந்த படத்தின் கதை ஓட்டத்திற்கு முக்கியமானவராக சின்னி ஜெயந்த் நடித்து பெயர் எடுத்தார். அந்த படத்தைத்தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் நடித்து பெயர் எடுத்தார். 80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸிகளின் ஃபேவரைட் காமெடி நடிகராக வலம் வந்தவர் சின்னி ஜெயந்த். காமெடி நடிகர் என்பதையும் கடந்து ஹீரோவிற்கு நிகரான பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தியுள்ளார்.

சின்னி ஜெயந்த்: குணச்சித்திர நடிகர், வில்லன் என தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். அஷ்டலட்சுமி கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சின்னி ஜெயந்த் மிமிக்ரி மற்றும் நகைச்சுவைக்காக டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இவர், கடந்த ஆண்டு ஆர் ஜே பாலாஜியின் "சிங்கப்பூர் சலூன்" ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதன் பின் யோகி பாபு நடிப்பில் வெளியான "போட்" திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சின்னி ஜெயந்தின் மகன்: 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நல்ல இடத்தில் இருக்கும் சின்னி ஜெயந்த், நடிகர்களின் வாரிசுகளும் நடிகராகத்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை உடைத்து, தனது மகனை சப் கலெக்டராக்கி அழகு பார்த்திருக்கிறார். இவருடைய மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தொடக்கத்தில் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக பணியாற்றி, இப்பொழுது விழுப்புரம் மாவட்ட சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார். இவர், அந்த பகுதியில் துணை ஆட்சியாளராக நியமிக்கப்பட்டதும், அந்த பகுதியில் வாழும் நரிக்குறவர் மக்களின் குறைகளை நேரடியாக சென்று கேட்டறிந்து, வீட்டுமனை பட்டா இல்லாத 7 குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். இவரின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்தன.

திருமணம்: இந்நிலையில், தற்போது சின்னி ஜெயந்தின் வீட்டில் விசேஷம் நடந்துள்ளது. சின்னி ஜெயந்தின் மகனான ஸ்ருதன் நாராயணனுக்கு சில மாதங்களுக்கு முன் மானஸ்வி என்பவருடன் நிச்சயம் நடைபெற்ற நிலையில், நேற்று கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், உதயநிதி, தயாநிதி மாறன், பொன்முடி, பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன், திருநாவுக்கரசர், ஜிகே வாசன் என பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த திருமண போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











