நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.. சோகத்தில் மூழ்கிய திரைத்துறை
சென்னை : நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 57.
மயில்சாமியின் இறப்பு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயில்சாமி நடிகராக மட்டுமில்லாமல், தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பல காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

நகைச்சுவை நடிகர் மயில்சாமி
நகைச்சுவை நடிகர் மயில்சாமி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அக்டோபர் 2ந் தே 1965ம் ஆண்டு பிறந்தார். மிமிக்கிரி கலைஞகரான இவர் பல நிகழ்ச்சியில் மிமிக்கிரி செய்து அசத்தினார். 1984ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் உருவான தாவணிக்கனவுகள் படத்தில் பல கனவுகளுடன் கூட்டத்தில் ஒருவராக நுழைந்தார்.

ஏராளமான படங்களில்
அதன் பின் கன்னி ராசி, என் தங்கச்சி படிச்சவ, அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா போன்ற அடுத்தடுத்த படங்களில், ஸ்டார் நடிகர்களான, கமல், ரஜினி, பிரபு, சத்தியராஜ், விஜயகாந்த் ஆகியோருடன் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நகைச்சுவை நடிகர் என முத்திரைப் பதித்தார்.

தொலைக்காட்சிகளிலும்
2000ம் ஆண்டுக்குப் பிறகு பலரும் அறியப்படும் நடிகராகப் பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி அசத்தப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

உயிரிழந்தார்
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த மயில்சாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இன்று அதிகாலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, குடும்பத்தினர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை செல்லும் முன்பே அவரின் உயிர் பிரிந்துவிட்டது. அவரின் இறப்பை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.மயில்சாமியின் இறப்பு தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆழ்ந்த இரங்கல்
தமிழ் நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் திடீர் மறைவு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, ரசிகர்களுக்கும், திரைப்பிரபலங்களும்ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











