வெறும் 57 வயது தான் ஆகுது.. காமெடி நடிகர் மயில்சாமி திடீர் உயிரிழப்பு.. துடித்துப்போன நடிகர்கள்!
சென்னை: தனது நகைச்சுவையான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த பிரபல காமெடி நடிகர் மயில்சாமி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 57.
தாவணி கனவுகள் படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய மயில்சாமி 1985ம் ஆண்டு வெளியான கன்னிராசி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார்.
நடிகர் விவேக், வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்திய மயில்சாமி விஜய்யின் கில்லி படத்தில் சிறப்பான ரோலில் நடித்து அசத்தியிருப்பார்.

மயில்சாமி மரணம்
சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நடிகர் மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அருகே உள்ள போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், மயில்சாமியின் குடும்பத்தினர் நிலைகுலைந்து போயுள்ளனர்.

நல்ல மனசுள்ள காமெடி நடிகர்
1984ம் ஆண்டு வெளியான பாக்கியராஜின் தாவணிக் கனவுகள் படத்தில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக திரைத்துறையில் நுழைந்த மயில்சாமிக்கு அடுத்த ஆண்டே கன்னிராசி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசனின் நண்பராகவே கலக்கினார் மயில்சாமி. ரஜினிகாந்தின் பணக்காரன் படத்தில் நடித்த மயில்சாமி அதன் பிறகு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். நல்ல மனசுள்ள காமெடி நடிகர் மயில்சாமி என்றே பலராலும் பாராட்டப்பட்டவர் மயில்சாமி.

லைட் ஹவுஸ் நாராயணன்
அஜித்துடன் பூவெல்லாம் உன் வாசம், ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்த மயில்சாமி விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்தார். அதன் பின்னர் கில்லி படத்தில் லைட் ஹவுஸ் நாராயணன் எனும் சிறப்பான கதாபாத்திரமே மயில்சாமிக்கு கிடைத்தது. நகைச்சுவை நடிகர்கள் விவேக் மற்றும் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார்.

துடித்துப்போன நடிகர்கள்
நடிகர் மயில்சாமியின் மறைவை கேட்டு ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. நகைச்சுவை நடிகர்கள் மனோபாலா, யோகி பாபு, சார்லி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் மயில்சாமியின் வீட்டுக்கு சினிமா பிரபலங்கள் மலர் மாலைகளுடன் இறுதி அஞ்சலி செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











