Robo Shankar: பொண்ணுக்காகவே வாழ்ந்த மனுசன்.. எக்னாமிக்ஸில் மாஸ்டர்.. இது ரோபோ சங்கரின் கதை
சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைந்துவிட்டார் என்ற தகவலை அவரது ரசிகர்கள் அவ்வளவு எளிதில் நம்பமாட்டார்கள். அவருக்கு சினிமாவில் ரசிகர்கள் உருவாவதற்கு முன்னரே, விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருந்தது. அவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னரும், நிகழ்ச்சி மேடைகளில் ரோபோ மெட்டாலிக் நிற பெயிண்ட்டை தனது உடலில் பூசிக் கொண்டு ரோபோவைப் போல தனது உடலை தத்ரூபமாக அசைக்க கூடியவர். இதனால்தான் அவருக்கு ரோபோ சங்கர் என்ற பெயரே உருவானது.
ரோபோ சங்கர் கடந்த 1978ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி பிறந்தார். இவர் மதுரை மண்ணைச் சேர்ந்தவர். படிப்பின் மீது எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ அதே அளவுக்கு மிமிக்கிரி மீதும் தனி ஆர்வம் ஏற்பட்டது. இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் தனது கல்லூரி காலத்தில் இருந்தே கிராமங்கள், நகரங்களில் திருவிழாவின் போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதில் ரோபோவைப் போல தனது உடலில் மெட்டாலிக் நிற பெயிண்ட்டை பூசிக் கொண்டு, ரோபோவைப் போலவே, தனது உடலை அசைத்துக் காட்டியதால் அவருக்கு ரோபோ சங்கர் என்று பெயர் வந்தது.

மிமிக்கிரி மீது இருந்த ஆர்வம் அவரை விஜய் தொலைக்காட்சிக்கு கொண்டு வந்துவிட, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டது மட்டும் இல்லாமல், ஒரு நட்சத்திரப் போட்டியாளராகவும் மாறினார். அதன் பின்னர் அவர் அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு செக்மென்ட்டில் இவர் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சி நடத்திய நடன நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். சின்னத்திரையில் இருந்த அவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகளும் அவ்வப்போது வந்தது.
பட வாய்ப்புகள்: அதாவது கடந்த 2011ஆம் ஆண்டு இவர் ரௌத்திரம் படத்தில் நடித்தார். ஆனால் எடிட்டிங்கில் இவரது காட்சியை நீக்கி விட்டார்கள். அதன் பின்னர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பின்னர் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த படம் என்றால் அது, வாயை மூடி பேசவும். அதேபோல் மாரி படமும் அவருக்கு பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. அதன் பின்னர் அவருக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தது. இவரது டைமிங் காமெடி இவருக்கு ஹாலிவுட் படமான தி லயன் கிங் படத்தின் இரண்டு பாகங்களிலும் தமிழில் டப்பிங் பேசுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தது.

மஞ்சள் காமாலை: ரோபோ சங்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அவர் மதுவுக்கு அடிமையாகி இருந்தார். குறிப்பாக மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கு முன்னர் வரை. அளவுக்கு அதிகமான மது பழக்கத்தின் காரணமாக அவருக்கு ஏற்பட்ட மஞ்சள் காமாலையால் பாதிப்புக்கு உள்ளானார். இப்படி இருக்கையில் அவருக்கு பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலின் அறிவுரையின் படி, எடுத்துக்கொண்ட மருத்துவத்தால், மீண்டு வந்தார். அதனால் அவர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் அவர் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். ஒரு வீடியோவில் கூட யாரும் மது அருந்தாதீர்கள் என்றும் அதனால் தான் மிகவும் அவதிப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மகளுக்காக: அதன் பின்னர் தனது மகள் இந்திரஜாவுக்காக அவர் வாழ முடிவு எடுத்தது போல, மகளுக்கு திருமணம், மகளின் மகனோடு கொண்டாட்டங்கள் என பேரனையும் பார்த்துவிட்டார். மனைவிதான் உலகம், மகள் தான் தெய்வம் என வாழ்ந்தவர் ரோபோ. ரோபோ எப்போதுமே கலகலப்பான நபர், தான் இருக்கும் இடத்தில் அனைவரையும் மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் தன்மை கொண்டவர். இப்படியான நபர் இன்றைக்கு இல்லை எனும் துக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் தனது 46வது வயதில் இன்று அதாவது செப்டம்பர் 18ஆம் தேதி மறைந்தார்.


Click it and Unblock the Notifications











