கடலூரில் நடைபெறும் ஜெயிலர் பட சூட்டிங்.. ரஜினியுடன் இணைந்த பிரபல காமெடி நடிகர்!
கடலூர் : நடிகர் ரஜினியின் நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியானது அண்ணாத்த படம். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சிவா இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் நடைபெற்றுவந்த நிலையில் தற்போது கடலூரில் இரண்டாவது கட்ட சூட்டிங் மாற்றப்பட்டுள்ளது.

ரஜினியின் அண்ணாத்த படம்
நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படம் கடந்த ஜனவரியில் வெளியானது. சிவா இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தனர். இந்தப் படம் கடந்த ஜனவரியில் பொங்கலையொட்டி வெளியான நிலையில், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் வசூலில் மிரட்டியது.

நெல்சனின் பீஸ்ட் படம்
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் இணைந்துள்ளார் ரஜினிகாந்த். விஜய், பூஜா ஹெக்டே லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்த பீஸ்ட் படமும் கலவையான விமர்சனங்களையே கொடுத்தது. ஆனாலும் விஜய்யின் நடிப்பில் இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து வசூலிலும் சாதித்தது.

ரஜினியை இயக்கும் நெல்சன்
இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கு முன்னதாகவே ரஜினியுடன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமிட்டாகியிருந்தார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். பீஸ்ட் படம் சொதப்பிய நிலையில், ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காது என்றும்கூட தகவல்கள் பரவின. ஆனால் ரஜினி -நெல்சன் கூட்டணி உறுதியானது.

ரஜினியின் 169வது படம்
ரஜினியின் 169வது படமான இந்தப் படத்திற்கு ஜெயலர் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு சூட்டிங் துவங்கப்பட்டது. ஜெயில் செட் போடப்பட்டு படத்தின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

கடலூரில் 2வது கட்ட சூட்டிங்
இந்நிலையில் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் தற்போது கடலூருக்கு மாற்றப்பட்டுள்ளது. ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ள நிலையில் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் கடலூரில் சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜினியுடன் இணைந்த யோகிபாபு
இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கில் தற்போது பிரபல காமெடி நடிகர் யோகிபாபு ரஜினியுடன் இணைந்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்களும் இந்த சூட்டிங்கில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் போர்ஷன்களில் காமெடி கலாட்டாக்கள் தூக்கலாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டில் ரிலீஸ்
படத்தின் சூட்டிங்கை வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்து ஆகஸ்ட் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக டான் இயக்குநர் சிபி சக்ரவர்த்தியுடன் தனது 170வது படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











