துப்பாக்கி சூட்டில் மொத்த குடும்பமும் போச்சு.. போண்டா மணியின் சோகம் நிறைந்த வாழ்க்கை!
சென்னை: இலங்கை அகதியான போண்டா மணியின் மொத்த குடும்பமும் துப்பாக்கிசூட்டில் சிக்கி உயிரிழந்தார்கள் என்று அவரின் சோகம் நிறைந்த வாழ்க்கை குறித்து பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.
250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள போண்டா மணிக்கு வாழ்க்கையை நடத்துவதே பெரிய பிரச்சனையாக இருந்ததால், பெரியதாக எதையும் சேர்த்துவைக்கவில்லை. அது மட்டுமில்லாமல் சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார்.
மாதத்திற்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்து வந்த அவருக்கு அஜித், ரஜினிகாந்த்,சூரி என பல நடிகர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வந்த நிலையிலும், நோய் பாதிப்புக் காரணமாக நேற்று இரவு உயிரிழந்து விட்டார்.

மொத்த குடும்பமும் போச்சு: இந்நிலையில் போண்டா மணியின் இறுதி சடங்கு சென்னை பொழிச்சலூரில் நடைபெற்றது. அவரது உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்தினார்கள். இதில் கலந்து கொண்ட போண்டா மணியின் நெருங்கிய நண்பரும், நடிகருமான பெஞ்சமின் கண்கலங்கி பேசி இருந்தார். அதில், போண்டா மணியின் அப்பா, அம்மா, அக்கா, தங்கை என அனைவருமே இலங்கை துப்பாக்கி குண்டுக்கு இரையாகி நடுகடலில் விழுந்து செத்துப்போனாங்க. போண்டா மணிக்கும் இரண்டு காலிலும் குண்டடிபட்டது, ஒரு காலில் இருந்த குண்டு அறுவை சிகிச்சையின் மூலம் எடுத்துவிட்ட போதும், மற்றொரு காலில் இருக்கும் குண்டை எடுத்தால் நடக்கவே முடியாது என்பதால் கடைசி வரை குண்டடிப்பட்ட காலுடனே இருந்தார். அதே காலுடன் அவர் தமிழ் நாட்டில் உள்ள எல்லா ஊருக்கும் போய் கலைநிகழ்ச்சி செய்து குடும்பத்தை காப்பாற்றினார்.
எந்த கெட்டப்பழக்கமும் இல்ல: பெரிய நடிகர் அனைவரும் நிறைய சம்பாதிக்கிறார்கள், அவர்கள் யாரும் இவருக்கு பணம் கொடுக்க தேவையில்லை. மாசத்திற்கு இரண்டு நாள் வேலை கொடுத்து இருந்தாலே, அவரது குடும்பம் நன்றாக இருந்து இருக்கும். வேலை இல்லாததால், ஊரு ஊரா போய் உடம்பை கெடுத்துக்கொண்டார். எந்தவிதமான கெட்டப்பழக்கமும் இல்லாத மனிதன் இன்னைக்கு இறந்து போய்டான். இதுவரைக்கும் யாரும் வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை அனைத்து சங்கத்திற்கும் தகவல் சொல்லியாச்சு. அவர் நல்லா இருக்கும் போதே பலரிடம் உதவி கேட்டோம் யாரும் எந்த உதவியும் செய்யவில்லை.
கதறி அழுத போண்டா மணி: அவருக்கு கிட்னி செயல் இழந்துவிட்டதால், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்து இருந்தோம். இரண்டு மூன்று முறை கிட்னி வந்தது. ஆனால், ஒரு கிட்னியும் மேட்ச் ஆகவில்லை. அதன் பிறகு திருச்சி எஸ்.ஆர் மருத்துவமனையில் பதிவு செய்தோம், அங்கு விபத்தில் சிக்கிய ஒருவரின் கிட்னி மேட்ச் ஆச்சு. ஆனால், கையில் பணம் இல்லாததால், போகமுடியாமல் இருந்தோம். அப்போது நடிகர் அர்ஜூன் 50 ஆயிரம் கொடுத்து உதவி செய்தார். ஆனால்,கடைசி நேரத்தில் கிட்னி கொடுப்பவர் இறந்துவிட்டதால் போண்டா மணிக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் போனது. அப்போதே, போண்டா மணி கதறி அழுதுவிட்டார்.
கதறி அழுத பெஞ்சமின்: கடந்த ஒரு மாசமாகவே போண்டா மணிக்கு உடல் நிலை ரொம்ப மோசமாகி விட்டது. மருத்துவமனையும் வீடுமாகத்தான் இருந்தாரு. எவ்வளவு முயற்சி செய்தும் கடைசியில் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். அவரை பரிசோதனை மருத்துவர்கள் அவர் இறந்து அரைமணி நேரம் ஆகிவிட்டது என்றார்கள் என்று போண்டா மணியின் நண்பனும் நடிகருமான பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











