’இனி ஒரு வருஷத்துக்கு என் சம்பளம் ஒரு ரூபாதான், போதும்..’ லாக்டவுனுக்காக காமெடி ஆர்த்தி அதிரடி!
சென்னை: இனி ஒரு வருடத்துக்கு தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார் காமெடி நடிகை ஆர்த்தி.
கொரோனா லாக்டவுன் காரணமாக, மொத்த சினிமாவும் முடங்கி இருக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சினிமாதுறை பல கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. பைனான்ஸ் வாங்கி படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தவித்து வருகிறார்கள்.

சம்பளக் குறைப்பு
இதையடுத்து முன்னணி நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் தங்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ் தவிர, தெலுங்கு, மலையாள சினிமாவிலும் இந்த கோரிக்கையை தயாரிப்பாளர்கள் வைத்துள்ளனர். இதையடுத்து தமிழில் முதன்முதலாக நடிகர் விஜய் ஆண்டனி, தனது சம்பளத்தில் 25 சதவிகிதத்தை குறைப்பதாகத் தெரிவித்தார்.

முன்னணி ஹீரோக்கள்
இதையடுத்து அவருக்குத் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்தனர். பின்னர், நடிகர்கள் உதயா, ஹரீஷ் கல்யாண், இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் தங்கள் சம்பளத்தை குறைத்தனர். மேலும் சிலர் குறைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் தங்கள் சம்பளக் குறைப்பு பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

கொரோனா காலம்
இந்நிலையில் பிரபல காமெடி நடிகை ஆர்த்தி, இந்த ஒருவருடத்தில் தான் நடிக்கும் படங்களுக்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: இந்த கடினமான இந்த கொரோனா காலம் மாறும்னு நம்பறேன். இந்த சினிமா நல்லா இருக்கணும்னுதான், பலர் தங்களோட சம்பளத்துல 25 சதவிகிதத்துல இருந்து 40 சதவிகிதம் வரை குறைச்சிருக்காங்க. அவங்களுக்கு நன்றி.

ஒரு ரூபாய்தான்
பெரிய பிள்ளையாருக்கு முன்னாடி சின்ன எலி இருக்குமில்லையா? அப்படித்தான் நானும். புரியுது, நான் எலி இல்ல, பெருச்சாலிதான். இனி ஒரு வருஷத்துக்கு நான் நடிக்க போற ஒவ்வொரு படங்கள்ல இருந்து, நான் சம்பளமா வாங்கப் போறது ஒரே ஒரு ரூபாய்தான். இனி சினிமா எப்படி இருக்கும்னு தெரியாது. இதை நம்பி முதலீடு போடற ஒவ்வொரு தயாரிப்பாளரும் நல்லாருக்கணும்.

சின்ன தொகை
'இந்த கேரக்டர்ல ஆர்த்தி நடிச்சா நல்லாருக்கும், ஆனா அவர் பட்ஜெட் அதிகமா இருக்குமே'ன்னு இனி யாரும் நினைக்க வேண்டாம். என்னை தைரியமா அழைக்கலாம். எனக்கு சம்பளம் ஒரு ரூபா போதும். சின்ன ரெக்யூஸ்ட் என்னன்னா, ஆர்த்தி நடிச்சா இவ்வளவு தொகை கொடுக்கலாம்னு முடிவு பண்ணி வச்சிருக்கிற பணத்தை, எக்ஸ்ட்ரா சில நடிகர்களை நடிக்க வச்சு அவங்களுக்கு கொடுக்கலாம். ஏன்னா, கிடைக்கிற சின்ன தொகையை வச்சு, அவங்க தன்மானத்தோட வாழ்வாங்க' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications