84 வயதில் ஹீரோவாக நடிக்கும் கவுண்டமணி.. ஒத்த ஓட்டு முத்தையா பட விழாவில் என்ன பேசினார் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக பல திரைப்படங்களில் கொடி கட்டிப்பறந்து அனைவரையும் சிரிக்க வைத்தவர் நடிகர் கவுண்டமணி. கேலி, கிண்டல், நக்கல், நையாண்டியால் பலரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த நடிகர் கவுண்டமணி தற்போது ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், கவுண்டமணி கலகலப்பாக பேசி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
நகைச்சுவை மன்னன் கவுண்டமணி மற்றும் செந்தில் ஜோடி படத்தில் வந்தாலே அந்த படம் வெற்றி என்று சொல்லும் அளவிற்கு இவர்களின் காமெடி பக்காவாக இருக்கும். இவர்கள் இருவரின் காமெடி இன்றும் சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் தான் இருக்கிறது. வயது மூப்பு காரணமாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் கவுண்டமணியின் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை' என்ற படம் வெளியாயனது.

ஒத்த ஓட்டு முத்தையா: தற்போது பழனிச்சாமி வாத்தியார், ஒத்த ஓட்டு முத்தையா ஆகிய படங்களில் நாயகனாக கவுண்டமணி நடித்து வருகிறார். ஷஷி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை, சாய் ராஜகோபால் இயக்குகிறார். கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடிகர்கள் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, கூல் சுரேஷ், சென்ராயன், லேகா ஶ்ரீ, டி.கே.ஶ்ரீநிவாசன், சதீஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
உற்சாகமான பேச்சு: இதில் கலந்து கொண்டு பேசிய கவுண்டமணி, ஒத்த ஓட்டு முத்தையா படம் குடும்பத்தோடு வந்து பார்க்கவேண்டிய படம். இந்த படத்தை அனைவரும் வந்து பாருங்க, இந்த ஒத்த ஓட்டு முத்தயாவை வெற்றி ஓட்டு முத்தயாவாக மாற்றுங்கள், அது உங்கள் கடமை, அது உங்களுடைய விருப்பம் இத்துடன் என் பேச்சை முடித்துக்கொள்கிறேன் என்று தன்னுடைய பாணியில் பேசினார். அப்போது, கேமரா மேன் பெயரை சொல்ல மறந்துவிட்டேன் சாரி என்று, கேமரா மேன் காத்தவராயன் அவர்கள், சிறப்பான முறையில் அனைவரும் வெளிச்சமாக தெரியும் வகையில் படம் எடுத்து இருக்கிறார். அவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கவுண்டமணி அந்த இசைவெளியீட்டு விழாவில் உற்சாகமாக பேசினார். நீண்ட நாட்களுக்கு பின் இவரின் பேச்சை கேட்ட ரசிகர்கள் கைதட்டி, விசில் அடித்து அவரை உற்சாகப்படுத்தினர்.


Click it and Unblock the Notifications











