twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ்.. நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷ் பிறந்த தினம் இன்று.. மறக்காத ரசிகர்கள்!

    |

    சென்னை: நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷின் 87வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    கலைஞர்களுக்கு இறப்பு என்பது உடலால் மட்டும் தான். அவர்கள் ஒவ்வொரு ரசிகனின் உள்ளத்திலும் நீங்காமல் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

    இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என அழைக்கப்பட்ட நாகேஷ் தமிழ் சினிமாவின் காமெடி கிங்காக இன்றும் நீடித்து இருக்கிறார்.

    பெயரிலே நகைச்சுவை

    பெயரிலே நகைச்சுவை

    1933ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தாராபுரத்தில் பிறந்தவர் நாகேஷ். அந்த ஒல்லியான உடம்புக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா? குண்டு ராவ்.. பெயரிலே எப்படி நகைச்சுவை தன்மை ஒட்டிக் கொண்டு இருக்கிறது பார்த்தீர்களா? மேடை நாடகங்களில் நாகேஸ்வரன் கதாபாத்திரத்தில் நடித்த அவரை திரைத்துறைக்கு எம்.ஜி.ஆர் தான் அழைத்து வந்தார். நாகேஸ்வரன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், பின்னாளில் நாகேஷ் ஆக மாறினார். 2009ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி தனது 75வது வயதில் இயற்கை எய்தினார்.

    ஆயிரம் படங்கள்

    ஆயிரம் படங்கள்

    1958ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை நடிகர் நாகேஷ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தி உள்ளார். இந்திய ரயில்வேயில் கிளர்க் ஆக வேலை செய்து வந்த நாகேஷ், தனக்கான சினிமா ரயிலை எம்.ஜி.ஆர் கரம் பிடித்து ஏறி ஏகப்பட்ட சாதனைகளை படைத்தார். மனமுள்ள் மறுதாரம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

    இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ்

    இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ்

    கிங் ஆப் காமெடி என்ற பெயர் பெற்ற ஹாலிவுட்டின் பிரபல காமெடி நடிகர் ஜெர்ரி லூயிஸுக்கு நிகராக இந்தியாவில் காமெடியில் கலக்கிய ஒரே நடிகர் நாகேஷ் என்பதால், இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என அழைக்கப்பட்டார் நாகேஷ். நகைச்சுவை மட்டுமின்றி நடனத்திலும் நாகேஷுக்கு நிகர் நாகேஷ் தான்.

    எம்.ஜி.ஆர் உடன்

    எம்.ஜி.ஆர் உடன்

    எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், சிவக்குமார் என ஏகப்பட்ட நடிகர்கள் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து அசத்தியவர் நாகேஷ். எம்.ஜி.ஆருடன் இவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் சூப்பர் ஹிட் தான். புதிய பூமி, படகோட்டி, நாடோடி, அரசகட்டளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, நல்ல நேரம் என நூற்றுக்கணக்கான படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

    காமெடி ஜோடி

    காமெடி ஜோடி

    நாகேஷுக்கு திரைப்படங்களில் பக்காவான காமெடி ஜோடியாக ஆச்சி மனோரமா இருந்தார். இருவரும் இணைந்து செய்த நகைச்சுவை அட்டகாசங்கள் தன் தமிழ் சினிமா ரசிகர்களை நோயில்லா வாழ்வில் பல ஆண்டுகள் வாழ வைத்தது என்றே சொல்லலாம். நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்து அசத்திய பெருமை இருவருக்குமே உண்டு.

    ஹீரோ நாகேஷ்

    ஹீரோ நாகேஷ்

    காமெடி நடிகராக நடித்து வந்த நாகேஷ், 1964ம் ஆண்டு இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான சர்வர் சுந்தரம் படத்தின் மூலம் ஹீரோவாக உயர்ந்தார். தொடர்ந்து, நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த், சாது மிரண்டால், அனுபவி ராஜா அனுபவி, எதிர்நீச்சல், சோப்பு சீப்பு கண்ணாடி உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

    கமலுடன்

    கமலுடன்

    எம்.ஜி.ஆருக்கு பிறகு கமலுடன் நடிகர் நாகேஷுக்கு நல்ல நெருக்கம் ஏற்பட்டது. மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் கமலுடன் இணைந்து காமெடியில் கலக்கி எடுத்து இருப்பார். நடிகர் நாகேஷை அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாகவே மாற்றி அழகு பார்த்திருப்பார் கமல்.

    கருப்பு நாகேஷ்

    கருப்பு நாகேஷ்

    இன்றைய மீம் தலைமுறைகளின் காமெடி கிங்காக இருக்கும் வைகைப் புயல் வடிவேலுவுக்கே கருப்பு நாகேஷ் என்ற பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. நாகேஷின் உடல் மொழிகள், நடனத் திறமை உள்ளிட்ட பலவற்றை உள் வாங்கி நடித்து கலக்கியவர் தான் வடிவேலு என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட உன்னத கலைஞனை அவரது பிறந்தநாளில் நினைத்து போற்றுவோம்.

    English summary
    Comedy King Nagesh’s 87th birth Anniversary today celebrated by his fans. Nagesh was praised as Indian Jerry Lewis.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X