Actor Senthil: இன்னொன்னுதாங்க இது.. வாழைப்பழ காமெடி மன்னன் செந்தில் பிறந்தநாள் இன்று!
சென்னை: நடிகர் கவுண்டமணி -செந்தில் இருவரும் இணைந்து காமெடி சாம்ராஜ்யத்தையே வழி நடத்தியவர்கள். 1000 ஆண்டுகள் ஆனாலும் இவர்களது காமெடிக்கு மவுசு குறையாது. கவுண்டமணியால் கண்டெடுக்கப்பட்டு திரைப்படங்களில் பயணித்த செந்தில், ஒருகட்டத்தில் அவரையே தன்னுடைய அப்பாவி நடிப்பால் ஓவர்டேக் செய்யுமளவிற்கு முன்னேறினார். 260 படங்களுக்கு மேல் நடித்துள்ள செந்தில், சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். தன்னுடைய நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மீண்டும் தனது பயணத்தை சினிமாவில் துவங்கியுள்ளார்.
முனுசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் சினிமாவிற்காக செந்தில் என தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார். கவுண்டமணியால் நாடகத்துறையில் அறிமுகம் செய்யப்பட்ட செந்தில், தொடர்ந்து சினிமாவிலும் அவருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் கால்ஷீட்டிற்காகவே முன்னணி நடிகர்கள் மட்டுமில்லாமல் பிரபல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களும் காத்திருந்த காலம் ஒன்று உண்டு. இதற்கேற்ப இவர்களின் காமெடிக்காகவே ஓடிய வெற்றிப்படங்களின் எண்ணிக்கையும் அதிகம். கவுண்டமணியுடன் இணைந்தும் தனியாக காமெடியனாகவும் செந்தில் நடித்துள்ளார். இதில் முத்தாய்ப்பாய் அமைந்த படம் ரஜினியுடன் செந்தில் நடித்து வெளியான முத்து.

நடிகர் செந்தில்: நடிகர் செந்தில் தன்னுடைய அப்பாவிடம் சண்டைப் போட்டுக் கொண்டு சென்னைக்கு ரயிலேறியவர். துவக்கத்தில் கிடைத்த வேலைகளை செய்துவந்த இவர், கவுண்டமணியுடன் கிடைத்த அறிமுகத்தால் நாடகங்களில் நடித்துள்ளார். அதன்மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்க கவுண்டமணியுடன் இணைந்து படங்களில் காமெடியனாக, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக பல கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். கவுண்டமணியுடன் மட்டுமில்லாமல் முத்து படத்தில் ரஜினியுடன் இணைந்து இவர் செய்த காமெடி கலாட்டாக்கள் எவர்கிரீன் ரகம். இதேபோல கவுண்டமணியுடனும் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார்.
கவுண்டமணி -செந்தில் காம்பினேஷன்: இதுவரை 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் செந்தில். காமெடி சீனா கூப்பிடு கவுண்டமணி -செந்திலை என்னுமளவிற்கு கோலிவுட்டில் இவர்களது ராஜ்ஜியம் காணப்பட்டது. அப்பாவி போன்ற முகபாவத்தை வைத்துக் கொண்டு கவுண்டமணியை கடுப்பேற்றி அதன்மூலம் அடிஉதை வாங்கும் கேரக்டர்கள் என்றால் செந்திலுக்கு அல்வா சாப்பிடுவது போல. அந்த வகையில் கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழ காமெடியை மறக்க முடியுமா. இந்தப் படத்தின் மற்றொரு முக்கியமான காமெடி, அது ஏன்டா என்னைப் பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்ட என்று கவுண்டமணி எகிறுவதுதான். இப்போது நினைத்தாலும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் காமெடி இது.
காமெடி கலாட்டா: படத்தின் ஊடாகவும் தனியாகவும் இவர்களது காமெடி டிராக் அமைந்தது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எவ்வளவுதான் காமெடி நடிகர்கள் வந்தாலும் இவர்கள் அனைவருக்கும் ஆதியாக கவுண்டமணி -செந்தில் காமெடிக்களை சொல்லலாம். ஆயினும் உருவக்கேலி உள்ளிட்டவற்றை மையமாக வைத்து இவர்களின் காமெடி காட்சிகள் அமைந்திருந்ததாக விமர்சனங்களையும் இவர்கள் எதிர்கொள்ளத்தான் செய்தார்கள். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று கவுண்டமணி ஒரு படத்தில் கூறுவது போல, அந்தக் காலத்தில் இது சாதாரணமாக, நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது.
லால் சலாமில் ரீ என்ட்ரி: தற்போது ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின்மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள செந்தில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவருக்குள் இருக்கும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் அவ்வப்போது தலைதூக்குவதையும் ரசிகர்களை என்ஜாய் செய்தே வருகின்றனர். இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் செந்தில். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும் டாக்டர் மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு என்ற இரு மகன்களும் உள்ளனர். தன்னுடைய தந்தை மிகவும் பாசமானவர் என்றும் தற்போதும் தங்களுக்கு அவர் உணவூட்டி விடுவார் என்றும் அவரது மகனும் மருத்துவருமான மணிகண்ட பிரபு பேட்டியொன்றில் நெகிழ்ச்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிடித்தமான நடிகர் + மனிதர்: இதைபோலவே சினிமாவிலும் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக மட்டுமில்லாமல் மனிதராகவும் செந்தில் காணப்படுகிறார். இவர் தனியாக ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் கவுண்டமணியுடன் இணைந்து இவர் செய்த காமெடி கலாட்டாக்களே மக்களுக்கு எப்போதும் பிடித்தமானவை. வைதேகி காத்திருந்தாள் படம்மூலம் ஹிட்டடித்த இந்த ஜோடி தன்னுடைய காமெடி கலாட்டாக்களை தொடர்ந்தது. ரசிகர்களின் மகிழ்ச்சியும் தொடர்ந்தது. இன்றைய தினம் தன்னுடைய 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் செந்திலுக்கு Filmibeat சார்பில் வாழ்த்துக்களை பகிர்வோம்.


Click it and Unblock the Notifications











