ஜெய்பீம் படத்தை பார்த்த ’தோழர்’ நல்லகண்ணு.. நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேலுவுக்கு பாராட்டு!
சென்னை: ஜெய்பீம் திரைப்படத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் 'தோழர்' நல்லகண்ணுவுக்கு நடிகர் சூர்யா பிரத்யேகமாக திரையிட்டு காட்டி உள்ளார்.
ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்த 'தோழர்' நல்லகண்ணு படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார்.
நடிகர் சூர்யா, சூர்யாவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான சிவகுமார், இயக்குநர் டி.ஜே. ஞானவேல் உள்ளிட்டோர் நல்லகண்ணுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

உலகளவில் பாராட்டு
ஜெய்பீம் திரைப்படம் உலகளவில் IMDB தர வரிசையில் ஹாலிவுட்டின் கிளாசிக் திரைப்படமானா The Shawshank Redemption, The God Father உள்ளிட்ட படங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது. அமேசான் பிரைமில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்த பல பிரபலங்கள் அந்த படத்தை பாராட்டித் தள்ளினர்.

தலைவர்கள் பாராட்டு
சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி படத்தை பார்த்த முதல்வர் முக ஸ்டாலின், திருமாவளவன், கேரளவை சேர்ந்த ஷீலா டீச்சர், சரத்குமார், கருணாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இந்த படத்தை வெகுவாக பாராட்டினார்கள். அதே சமயம் அரசியல் ரீதியாக படத்திற்கு எதிர்ப்பும் கிளம்பியது.

பாமக எதிர்ப்பு
வன்னியர் சமூதாயத்திற்கு எதிராக நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் உள்நோக்கத்துடன் சில காட்சிகளும் சில பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக பாமகவினர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். நடிகர் சூர்யாவை அடித்தால் பரிசு என்றும் ஜெய்பீம் படக்குழு நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பிரச்சனை பெரிதானது.

வருத்தம் தெரிவித்த இயக்குநர்
அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு நடிகர் சூர்யா பதில் அளிக்க பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. தொடர்ந்து பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று முடிவெடுத்த படக்குழுவினர் சுமூகமாக பிரச்சனையை முடிக்கும் வகையில் இயக்குநர் தா.செ. ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டு பிரச்சனையை முடிக்க முன்வந்தார்.

ஜெய்பீம் பார்த்த நல்லகண்ணு
இந்நிலையில், தற்போது ஜெய்பீம் திரைப்படத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் 'தோழர்' நல்லகண்ணுவுக்கு நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் பிரத்யேக திரையிடல் போட்டு காண்பிக்கப்பட்டு இருக்கிறது. இதில், நடிகர் சூர்யா, சிவகுமார், இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நல்லகண்ணு பாராட்டு
ராஜாகண்ணுவின் வழக்கை நீதிமன்றத்துக்கு எடுத்து செல்ல பெரிதும் உதவியது கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் என்பதை படத்தில் பெரிதாக காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், படத்தை பார்த்த தோழர் நல்லகண்ணு சூர்யாவின் நல்ல முயற்சிக்கு தனது பாராட்டுக்கள் என ஜெய்பீம் படத்தை பாராட்டி உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











