அது முழுக்க ஒரு பொய்யான புகார்.. என் தரப்பில் தவறு இல்லை: நடிகர் ஆர்கே சுரேஷ் விளக்கம்!
சென்னை: தன் மீது அளிக்கப்பட்டுள்ள புகார் முழுக்க பொய்யானது என நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் வங்கிக் கடன் பெற்று தருவதாக கூறி ஒரு கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாக விழுப்புரத்தை சேர்ந்த வீணா என்ற பெண் சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளித்தார்.
ஆர்கே சுரேஷ் 10 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் அந்த வேதனையிலேயே தனது கணவர் ராமமூர்த்தி இறந்துவிட்டதாகவும் கூறினார்.

ஆர்கே சுரேஷ் விளக்கம்
மேலும் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றும் கூறியிருந்தார் வீணா. இந்நிலையில் தன் மீதான புகார் முழுக்க பொய் என ஆர்கே சுரேஷ் தெரிவித்துள்ளார். வீணா அளித்த புகார் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கும் தன் தரப்பு ஆவணங்களைக் கொடுப்பதற்கும் ஆர்.கே .சுரேஷ் நேற்று காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

ஜோடிக்கப்பட்ட பொய்
தன் தரப்பு ஆவணங்களையும் ஆதாரங்களையும் ஆணையர் வசம் கொடுத்து விட்டு வெளியே வந்தவர், ஊடகங்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "நான் எந்த மோசடியும் செய்யவில்லை. என்மீது என் தரப்பில் எந்தத் தவறும் இல்லை. அது முழுக்க ஜோடிக்கப்பட்ட பொய்யான புகார்" என்றார்.

எனது நாணயம் தெரியும்
மேலும் அவர் பேசும்போது,
"நான் இந்தச் சினிமா துறையில் 12 ஆண்டுகளாக இருக்கிறேன். தயாரிப்பாளராகப் பல படங்கள் தயாரித்துள்ளேன். பல படங்களை விநியோகம் செய்துள்ளேன். என்னைப் பற்றியும் எனது நாணயம் பற்றியும் அனைவருக்கும் தெரியும். நான் எனது தேவைக்காக வேறு வீடு வாங்கியதால் நான் வாழ்ந்த வீட்டை விற்றேன்.

ஏன் மோசடி செய்ய வேண்டும்?
நான் விற்றேன் இன்னொருவர் வாங்கினார். இவ்வளவுதான் இதிலுள்ள விஷயம். நான் என் வீட்டை விற்பதற்காக ஏன் இன்னொருவருக்கு கடன் வாங்கிக் கொடுக்க வேண்டும்? அதிலே நான் மோசடி செய்ய வேண்டும்? இது முழுக்க முழுக்க ஒரு உள்நோக்கத்தோடு ஜோடிக்கப்பட்ட ஒரு பொய்யான புகார். விற்கப்போகும் என் வீட்டுக்காக நான் ஏன் கடன் வாங்க வேண்டும்?

ஆதாரங்களை அளித்துள்ளேன்
என்மீதான இந்த பொய்ப் புகார் வேண்டுமென்றே சிலரின் தூண்டுதலால் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான எனது விளக்கத்தையும் என் தரப்பு ஆவணங்களையும் ஆதாரங்களையும் இன்று ஆணையாளர் அலுவலகத்தில் நான் கொடுத்திருக்கிறேன். அந்த பொய்யான புகாரின் மீது விசாரிப்பதாக ஆணையாளர் அவர்கள் கூறியுள்ளார்." இவ்வாறு நடிகர் ஆர்.கே .சுரேஷ் கூறினார்.


Click it and Unblock the Notifications











