GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ஆரம்பித்தது பஞ்சாயத்து.. ரத்த வெறியை தூண்டுவதாக விஜய் மீது புகார்
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகிவருகிறது GOAT திரைப்படம். வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. முதன்முறையாக விஜய் - வெங்கட் பிரபு - யுவன் கூட்டணி இணைந்திருப்பதால் படத்தின் மீதும், பாடல்கள் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. சூழல் இப்படி இருக்க நேற்று மாலை படத்திலிருந்து பார்ட்டி ஒன்னு என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் விஜய் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார் விஜய். அஜித்துக்கு எப்படி வெங்கட் பிரபு மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யாவில் நடந்துவருகிறது. இந்த ஷெட்யூலோடு படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிந்துவிடும் என்றும் அதற்கு பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சூடுபிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படமானது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகிறது.

ஃபர்ஸ்ட் சிங்கிள்: படத்திலிருந்து முதல் சிங்கிள் நேற்று வெளியானது. பல வருடங்களுக்கு பிறகு விஜய் படத்துக்கு யுவன் இசையமைப்பதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது பாடலுக்கு. பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலை விஜய் பாட, மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். பாடலின் ஆரம்ப வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை குறிக்கும் வகையில் இருக்கின்றன. முதலில் கேம்பைன் என்று சொல்லிவிட்டு; பிறகு ஷாம்பைன் என்று வரும்படி கார்க்கி எழுதியிருக்கிறார். விஜய் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் சூழலில் இந்த மாதிரியான வரிகள் அவரது ரசிகர்களிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
புகார்: அதேசமயம் பாடல் பொதுவான ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை என்பதே எதார்த்தம். இந்நிலையில் விஜய்யின் பாடல் வந்தாலே ஏதாவது ஒரு பஞ்சாயத்து வரும் என்பதற்கேற்ப இந்தப் பாடலுக்கு எதிராகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அளிக்கப்பட்டிருக்கும் புகாரில், "நடிகர் விஜய் பிரச்னையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். லியோவில்கூட போதையை ஆதரித்து பாடலை வெளியிட்டார்.
பார்ட்டி ஒன்னு: இப்போது விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும்வகையிலும் இருக்கிறது. குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதை பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக வரும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வர வேண்டும். ஆனால் இதில் வரவில்லை.
தொடர்ந்து செய்கிறார்: அதிரடி காட்டட்டுமா ஷேம்பைனதான் தொறக்கட்டுமா என்று பாடுகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும்வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றிருக்கிறது. மைக்கை கையில் எடுக்கட்டுமா? என்ற வரியில் தமிழ்நாடு அரசியலில் சில தலைவர்களை; குறிப்பாக சீமான், கமல், மன்சூர் அலிகான் போன்றவர்களை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்று ஒருவரை புண்படுத்தும் வகையில் பாடுகிறார்.
மிரட்டும் தொனி: விஜய் மீது புகார் கொடுத்தால் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டும் தொனியில் வெடி வெடிச்சா என் பாய்ஸ்தான் என்று மிரட்டுகிறார். குடிமக்கள்தான் தம் கூட்டணி என்கிறார். ஆனால் மணிப்பூர் கலவரத்துக்கு விஜய் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமலும் இருந்துவிட்டு படத்துக்காக மட்டும் வாய் திறக்கும் நடிகராக விஜய் இருக்கிறார். ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா, நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டுகிறார்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











