Yogi Babu - சிக்கலில் யோகி பாபு.. காவல் நிலையம்வரை சென்ற பஞ்சாயத்து.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: Yogi Babu (யோகிபாபு) யோகிபாபு மீது ஹாசிர் என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்து இருக்கிறார் யோகிபாபு. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி பின்னர் வெள்ளி திரைக்கு வந்தவர். வெள்ளித்திரைக்கு வந்த புதிதில் அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு வழியாக யாமிருக்க பயமேன் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டது. அதே சமயம் அந்தப் படத்தில் யோகிபாபுவை அளவுக்கு அதிகமாகவே உருவகேலி செய்துவிட்டார்கள் என்ற விமர்சனமும் எழுந்தது

குவிந்த வாய்ப்புகள்: அந்தப் படத்திற்குப் பிறகு யோகிபாபுவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டவர் தனது டைமிங் காமெடிகளாலும் கவுண்ட்டர்களாலும் ரசிகர்களை வெகுவாகவே சிரிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் வடிவேலு ஒதுங்க, விவேக் இறந்து போக, சந்தானம் ஹீரோவாக மாற என காமெடிக்கென வெற்றிடம் உருவானது. அதனை யோகிபாபு நிரப்பினார்.
ஹீரோ: யோகிபாபுநெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்திலும் ஹீரோவாக நடித்தார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து அவர் நடித்த கூர்கா உள்ளிட்ட படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. ஹீரோவாக நடித்தாலும் காமெடி ரோலிலும் தொடர்ந்து நடித்துவருகிறார். அந்த வகையில் கடைசியாக அவர் மாவீரன் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
ஜவான்: இந்தப் படங்கள் தவிர்த்து ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜவான் படத்திலும் யோகிபாபு நடித்திருக்கிறார். இந்தப் படமானது செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. ஜவான் படத்தை தவிர்த்து தமிழிலும் யோகிபாபு ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதன் காரணமாக அவர் தற்போது பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
புகார்: இந்நிலையில் யோகிபாபு மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ரூபி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை விருகம்பாக்கத்தில் நடித்துவருகிறார் ஹாசிர். அவர் ஜாக் டேனியல் என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்து யோகிபாபு நடிக்க 65 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசி 20 லட்சம் ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் முன் பணத்தை பெற்றுக்கொண்ட யோகிபாபு ஷூட்டிங் தொடங்கியதும் படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹாசிர் கொடுத்த பணத்தை கேட்டபோது அதற்கும் யோகிபாபு மறுத்துவிட்டார் என்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தாதா என்ற படம் தொடர்பாக யோகிபாபு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











