இரிடியம் தருவதாக கூறி ரூ. 26 கோடி மோசடி.. பிரபல இசையமைப்பாளர் கைது.. பரபரக்கும் கோலிவுட்!
சென்னை: 26 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிரபல இசையமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரிஸ். 33 வயதான இவர் பிரபல சினிமா இசையமைப்பாளராக உள்ளார்.
நடிகர் லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லிசாப்ளின்-2 உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

போயஸ் கார்டனில்
மேலும் நானே என்னுள் இல்லை என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் சென்னை போயஸ் கார்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை, இவர் சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு வீட்டில் சினிமா இசை அமைப்பு பணியில் இருந்தார்.

நடிகை ஜெயசித்ரா
அப்போது அங்கு வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை விசாரணைக்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். இதனை அறிந்த நடிகை ஜெயசித்ரா நேற்று பகலில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.

எங்கு உள்ளார்? என்ன ஆனது?
பின்னர் தனது மகனை சீருடை அணியாமல் வந்த சிலர் போலீஸ் என்று கூறி அழைத்து சென்று விட்டனர் என்றும், தற்போது அவர் எங்கு உள்ளார்? என்ன ஆனது என்று ஒன்றும் புரியவில்லை என்றும் கூறினார்.

ஜெயசித்ரா அதிர்ச்சி
அப்போதுதான் மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அம்ரிஷை கைது செய்துள்ளனர் என்று நடிகை ஜெயசித்ராவிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தார் ஜெயச்சித்ரா.

பெரும் பரபரப்பு
இதனிடையே அம்ரிஷ் மீது 26 கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிகாரப்பூர்வமாக நேற்று இரவு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா பாணியில்
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நெடுமாறன் என்பவரிடம், சதுரங்க வேட்டை பட பாணியில் இரிடியம் தருவதாகவும், வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் அது விலை போகும் என்று கூறி அம்ரிஷும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து 26 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு போலியான இரிடியம் பொருளை கொடுத்து மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது.

8 வருடங்களாக தலைமறைவு
கடந்த 2013 ஆம் ஆண்டு அம்ரிஷ் இந்த மோசடியில் ஈடுபட்டதாக நெடுமாறன் கொடுத்த புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அம்ரிஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications