அகமதாபாத் விமான விபத்து..பிரபலங்கள் இரங்கல்..நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!
சென்னை: அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலரையும் உலுக்கிய இந்த விபத்து பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா AI171 என்ற போயிங் விமானம்
மதியம் 1:38 மணியளவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணிகள், விமானிகள், விமானப் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் அதில் இருந்தனர். புறப்பட்ட சில நொடிகளில் அந்த விமானம், விமான நிலையத்திற்கு அருகே இருந்த ஒரு மருத்துவர் விடுதி மீது விழுந்து நொறுங்கியது. விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை தேசிய பாதுகாப்பு படையினர் மீட்டனர். விமான விபத்து தகவல் அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமானம் மூலம் டெல்லியிலிருந்து குஜராத் சென்றார். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.

விமான விபத்து: இந்த கோர விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இணையத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா தனது எக்ஸ் தளபக்கத்தில், அகமதாபாத்தில் நடந்த துயர சம்பவத்தால் நான் மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வலிமையும், குணமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
பிரபங்கள் இரங்கல்: தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்தால் மனம் உடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். உண்மையிலேயே மனதை வருத்தும். ஆமதாபாத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் விமான விபத்து காரணமாக, இந்தூரில் நடைபெறவிருந்த ''கண்ணப்பா'' டிரெய்லர் வெளியீட்டு விழாவை படக்குழு ஒத்திவைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











