தமிழ்நாட்டின் பாதிப் பணம் அன்புச்செழியனிடம் இருக்கு.. ஐ.டி ரெய்டுக்கு அழைக்கும் சுசீந்திரன்!
Recommended Video

சென்னை : சசிகுமாரின் மைத்துனரும் 'கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியுமான அசோக் குமார் நேற்று மாலை தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்குக் காரணம் குறிப்பிட்டு அவர் கைப்பட எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றது.
பிரபல சினிமா ஃபைனான்சியர் அன்புச் செழியனிடம் கந்துவட்டிக்குப் பணம் வாங்கி அவரது மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார் அசோக் குமார். அன்புச்செழியனிடமிருந்து தமிழ் சினிமாவைக் காப்பாற்றும்படியும் அவர் வேண்டியிருக்கிறார்.

இந்தச் செய்தியால் ஒட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகமே கொதித்துப் போயுள்ளது. கந்துவட்டிக் கும்பலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் இது என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் அறிக்கை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இயக்குநர் சுசீந்திரன் மதுரை அன்புச்செழியனுக்கு எதிராக அதிர்ச்சித் தகவல்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டார். தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பலர் அன்புவால் பாதிக்கப்பட்ட தகவலையும் கூறியுள்ளார்.
அதோடு, மத்திய அரசுக்கும், வருவாய்த் துறையினருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன். 'தமிழ்நாட்டின் பாதிப் பணம் அன்புவிடம் இருக்கும். தயவுசெய்து அவர் வீட்டிலும் ரெய்டு செல்லவும்' எனக் கோரியுள்ளார் சுசீந்திரன்.
சினிமா ஃபைனான்சியரான மதுரை அன்புச்செழியன் அதிகாரத்தில் இருக்கும் பலருக்கு பினாமியாகச் செயல்பட்டு வருபவர் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. தமிழ் சினிமாவின் அவலநிலைக்குக் காரணமான அன்புச்செழியனை தண்டிக்கவேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications











