வாழ்த்துகள் விஜய்.. முதல் ஆளாக பாலிவுட்டில் இருந்து பிரபல நடிகர் வாழ்த்து.. வெங்கட் பிரபு ட்வீட்!
சென்னை: 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெளிவந்துள்ள முன்னிலை நிலவரங்களின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சுமார் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, அதிமுக 70 இடங்களிலும், தற்போதைய ஆளுங்கட்சியான திமுக 60 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. கொண்டாட்டத்தில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள், வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையிலும், எந்தவொரு கட்சியும் அதிகாரப்பூர்வமாக வெற்றிபெறாத நிலையிலும், தற்போதைய முன்னிலை விவரங்களை வைத்தே விஜய்தான் அடுத்த முதல்வர் என்று அவரது ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இப்போதே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குவியும் வாழ்த்துகள்: விஜய்யின் இந்த அரசியல் எழுச்சியைக் கண்டு திரைத்துறையினர் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபு: தனது 'எக்ஸ்' (Twitter) பக்கத்தில், 'கோட்' (GOAT) படத்தின் பின்னணி இசையுடன் விஜய்யின் புகைப்படமும் கட்சியின் கொடியும் இணைந்த வீடியோவைப் பகிர்ந்து, "அடுத்து விஜய் தான்" என்பது போன்ற பதிவை இட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் 'டைகர் ஷெராஃப்': "விஜய், மக்கள் உங்கள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் நீங்கள்தான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. உங்கள் தலைமையில் தமிழ்நாடு அடுத்த கட்டத்திற்கு முன்னேறட்டும்," என்று எக்ஸ் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.ஏற்கனவே ஜான் மகேந்திரன், நடிகை ஏஜென்ட் டீனா உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தேசிய அளவில் கவனம் பெறும் தவெக: தென்னிந்தியத் திரைத்துறையினர் மட்டுமின்றி, பாலிவுட் வரை ஒட்டுமொத்த இந்தியாவே தற்போது தமிழ்நாடு தேர்தல் முடிவுகளை உற்றுநோக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2024-இல் தன் ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றிய விஜய், கட்சி தொடங்கி மிகக் குறுகிய காலத்திலேயே திமுக, அதிமுக போன்ற பலமான பாரம்பரியக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி முன்னிலைக்கு வந்துள்ளார்.ஒரு மக்கள் செல்வாக்கு மிக்கத் தலைவராக விஜய் உருவெடுத்திருப்பது, இன்று இந்தியா முழுவதும் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications