வறுமையில் வாடிய கலக்கப்போவது யாரு போட்டியாளர்.. ஓடோடிச் சென்று உதவிய சர்ச்சை பேச்சாளர் மஹாவிஷ்ணு!
சென்னை: சில மாதங்களுக்கு முன்னர் பெரும் சர்ச்சையைச் சந்தித்தவர் மஹாவிஷ்ணு. சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் பேசும்போது மிகவும் மோசமான மற்றும் பிற்போக்குத்தனமான கருத்துகளை மாணவர்களிடத்தில் பரப்பினார். இதனைத் தட்டிக் கேட்ட மாற்றுத் திறனாளி ஆசிரியரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெருமளவில் ட்ரெண்ட் ஆனது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். பொய்யாமொழியே நேரடியாக களத்தில் இறங்கி, மஹாவிஷ்ணு கைது செய்யப்படுவார். எனது ஆசிரியரை எப்படி அசிங்கப்படுத்தலாம் என ஆவேசமாக பேசினார்.
இந்தச் சம்பவம் நடைபெற்று சில நாட்களாக மஹா விஷ்ணுவை போலீசார் தேடிவந்தனர். வெளிநாட்டில் ஆன்மீகப் சொற்பொழிவு நடத்தச் சென்றிருந்த மஹாவிஷ்ணு தமிழ்நாடு வந்ததும் விமான நிலையத்திலேயே கைது செய்தது தமிழ்நாடு காவல்துறை. நீதிமன்றக் காவலில் இருந்த மஹாவிஷ்ணு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் மஹா விஷ்ணு, அரசுப் பள்ளியில் பேசும்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதாவது அவர் தனது பேச்சில் முன் ஜென்மம், அதில் செய்த பாவ, புண்ணியங்கள், அதனால் ஏற்படும் கர்ம வினைகள் என அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை பள்ளி மாணவர்களிடம் பேசினார். மேலும் தற்போது மாற்றுத்திறனாளிகளாக உள்ள ஒவ்வொருவரும் முன் ஜென்மத்தில் செய்த பாவங்களினால் மாற்றுத்திறனாளிகளாக பிறந்துள்ளார்கள் எனப் பேசினார்.
வழக்கு: இவரது இந்த அறிவியலுக்கு அப்பாற்ப்பட்ட முற்றிலும் உண்மைக்கு மாறான பேச்சினை பள்ளியில் மாற்றுத் திறனாளி ஆசிரியர் எதிர்த்து கேள்வி கேட்டதால் அவரை அவமதிக்கும் வகையில் பேசினார். இதனால் இருவருக்கும் இடையில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் ட்ரெண்ட் ஆன வீடியோவினால் இந்த விவகாரம் வெளியே தெரியவர, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது: ஆஸ்திரேலியாவில் இருந்த மஹா விஷ்ணு அங்கிருந்து கொண்டு தன்மீது குற்றம் எதுவும் இல்லை என வீடியோ வெளியிட்டது மட்டும் இல்லாமல், தான் எதற்காக ஓடி ஒளியவேண்டும் எனக் கேட்டார். சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்திலேயே விசாரித்த திருவொற்றியூர் காவல்துறையினர், அதன் பின்னர் கைது செய்து லாக்-அப்பில் அடைத்தனர்.
கலக்கப்போவது யாரு: சுமார் ஒருமாத காலம் சிறையில் இருந்த மஹாவிஷ்ணு, அதன் பின்னர் நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாகேஷ் செல்லக்கண்ணு என்பவர் தான் வறுமையில் வாடுவதாகவும் தனக்கு ஏதாவது உதவ முடியுமா எனவும் கேட்டு மஹாவிஷ்ணுவைத் தொடர்பு கொண்டுள்ளார். என்ன உதவி வேண்டும் எனக் கேட்டதற்கு, தான் தற்போது வாடகை ஆட்டோ ஓட்டி வருவதாகவும், தனக்கு சொந்தமாக ஒரு ஆட்டோ வாங்கிக் கொடுத்தால் வறுமையில் இருந்து மெல்ல மெல்ல வெளியே வரமுடியும் எனவும் கூறியுள்ளார். இதனால் மஹாவிஷ்ணு தானே நேரடியாகச் சென்று நகேஷ் செல்லக்கண்ணுக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. பலர் இவரது செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல், மஹா விஷ்ணு ஏற்கனவே, ' நான் செய்த குறும்பு' என்ற படத்தினை இயக்கினார். படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.


Click it and Unblock the Notifications