Ponniyin Selvan 2 - பொன்னியின் செல்வன் 2 - முண்டா பனியனுடன் குதிரையில் வந்த கூல் சுரேஷ்
சென்னை: Ponniyin Selvan 2 (பொன்னியின் செல்வன் 2) பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்ப்பதற்கு நடிகர் கூல் சுரேஷ் முண்டா பனியனுடன் குதிரையில் வந்து இறங்கினார்.
நடிகர் சிம்புவின் தீவிர ரசிகராக இருப்பவர் நடிகர் கூல் சுரேஷ். வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து சிம்புவின் படங்களுக்கு தீவிரமாக ப்ரோமோஷன் செய்துவருபவர். அவரது பேச்சு ரசிக்கும்படியாக இருந்தாலும் சில சமயங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகக்கூடியவை. ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அவர் சிம்புவின் படங்களுக்கு ப்ரோமோஷன் செய்வதையே தனது மூச்சாக கொண்டிருந்தார். அதனையடுத்து வெளியாகக்கூடிய எல்லா படங்களுக்கும் புரோமோஷனில் ஈடுபடுகிறார்.

பொன்னியின் செல்வன் 2: இந்தச் சூழலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. முதல் பாகம் போலவே இந்த பாகமும் நிச்சயம் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினரும், ரசிகர்களும் இருந்தனர். அந்த எதிர்பார்ப்போடு இன்று படமானது திரையரங்குகளில் வெளியானது.
படையெடுத்த ரசிகர்கள்: முதல் பாக முடிவில் அருண்மொழி வர்மன் கடலுக்குள் விழுவது போலவும், அவரை காப்பாற்ற ஊமைராணி நீருக்குள் குதிப்பதுபோலவும் படத்தை முடித்திருந்தார் மணிரத்னம். இரண்டாம் பாகம் அதிலிருந்து தொடங்குகிறது. நள்ளிரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்தனர்.
குதிரையில் வந்த கூல் சுரேஷ்: இந்நிலையில் சென்னை காசி தியேட்டரில் நடிகர் கூல் சுரேஷ் படம் பார்ப்பதற்காக வந்தார். எல்லா படங்களுக்கு வித்தியாசமான முறையில் வருகை தரும் கூல் சுரேஷ் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் பார்ப்பதற்கு முண்டா பனியன் அணிந்துகொண்டு குதிரையில் வந்து இறங்கினார்.
மேலும், வெந்து தணிந்தது காடு பொன்னியின் செல்வன் 2வுக்கு வணக்கத்த போடு என அவரது ட்ரேட் மார்க் வசனத்தையும் உச்சரித்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் ஆராவாராம் செய்து ஆச்சரியப்பட்டனர். அவர் குதிரையில் வந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா பொன்னியின் செல்வன் 2: முன்னதாக முதல் பாகத்தில் இருந்த சில குறைகள் இரண்டாம் பாகத்தில் இருக்காது என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே அதிகம் இருந்தது. பொன்னியின் செல்வன் 2வை பார்த்த ரசிகர்களில் பலர் படம் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டதாக கூறுகின்றனர். அதேசமயம் ஒரு தரப்பினர் இரண்டாம் பாகத்துக்கு முதல் பாகமே பரவாயில்லை; பொன்னியின் செல்வன் நாவலையே படத்தில் மணிரத்னம் மாற்றி வைத்திருக்கிறார் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை: படத்தில் விக்ரமின் நடிப்பு அட்டகாசமாக இருப்பதாகவும், ஐஸ்வர்யா ராய் - விக்ரம் இடையேயான போர்ஷனை மணிரத்னம் மிக நுட்பமாக கையாண்டிருக்கிறார் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர். அதேபோல், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை முதல் பாகத்தைவிடவும் இரண்டாம் பாகத்தில் அட்டகாசமாக இருக்கிறது என்றும் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸை பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











