ஒரு கை சோறு சாப்பிடலையே.. நெஞ்சமெல்லாம் துடிக்கிது.. வாழை படத்தை வாழ்த்திய ரஜினி!
சென்னை: பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் நான்காவது திரைப்படமாக உருவாகி வெளியானத் திரைப்படம் வாழை. இப்படத்தை அனைவரும் பாராட்டி வாழ்த்தி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இப்படத்தை வெகுவாக புகழ்ந்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக பொன்வேல், ராகுல், கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல், ஜெய் சதீஷ் குமார், ஜானகி என மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பொன்வேல், படித்துக்கொண்ட வார விடுமுறை நாட்களில், வாழைக்காய் சுமந்த தனது குடும்பத்திற்கு உதவியாக இருக்கிறான். சிறுவனான அவனுக்கு வாழைக்காய் சுமப்பது பிடிக்காததால், அந்த வேலையை செய்யாமல் இருக்க பல பொய்களை சொல்லுகிறான்.

மாரி செல்வராஜின் வாழை: இந்த நேரத்தில் தான் தொழிலாளர்கள் கூலியை உயர்த்தி போராட்டம் நடத்துகின்றனர். இதனால், வேறு வழியில்லாமல் வியாபாரி கூலியை உயர்த்தி வருகிறார். இதனால், அந்த வியாபாரி வேறுவிதமான பிரச்சனைகளை அந்த தொழிலாளர்களுக்கு கொடுக்கிறார்கள். இதனால், அந்த ஒட்டு மொத்த கிராமம் சந்தித்த கஷ்டத்தை அப்பட்டமாக திரையில் காட்டி உள்ளார் மாரி செல்வராஜ். கடந்த 23ந் தேதி தியேட்டரில் வெளியான இப்படத்திற்கு பலரிடம் இருந்து கிடைத்து வரும் ஆதரவால், உலகளவில் இப்படம் 10 நாட்களில் ரூ 22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாராட்டிய ரஜினிகாந்த்: இந்நிலையில், படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது எக்ஸ் தள பக்கத்தில், அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.

மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும் என்று கூறியுள்ளார். ரஜினியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











