ஆமிர் கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன லோகேஷ் கனகராஜ்.. கூலியில் செம கெத்தா இருக்காரே
சென்னை: லோகேஷ் கனகராஜ் இப்போது கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டன் இயக்குநராக இருக்கிறார். இதுவரை அவர் இயக்கிய படங்களில் லியோ படம் தவிர்த்து அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தவை. குறிப்பாக கமல் ஹாசனை வைத்து அவர் உருவாக்கிய விக்ரம் திரைப்படம் 300 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. தற்போது அவர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கிவருகிறார். இந்தச் சூழலில் ஆமிர் கானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
மாநகரம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவுக்குள் இயக்குநராக வந்தவர் லோகேஷ் கனகராஜ். யாரிடமும் உதவி இயக்குநராகவெல்லாம் பணியாற்றாத அவர்; தான் இயக்கிய குறும்படங்களின் அனுபவங்களை வைத்து முதல் படத்தை இயக்கினார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. ஒரே இரவில் நடக்கும்படியான கதை வைத்து; அதற்கு திறமையான திரைக்கதையை அமைத்து கெத்து காண்பித்தார்.

இரண்டு மெகா ஹிட்டுகள்: முதல் இரண்டு படங்களுமே ஹிட்டானதைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முதல் மூன்று படங்களுமே சூப்பர் ஹிட்டான சூழலில்; கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார் லோகி. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. லோகேஷ் கனகராஜின் கரியரையும் உச்சத்துக்கு கொண்டு சென்று; இந்திய அளவில் ஃபேமஸான இயக்குநராக மாற்றியது. அவரது இயக்கத்தில் ஒரு சீனிலாவது நடித்துவிட நடிகர்கள் ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடி வாங்கிய லியோ: சூழல் இப்படி இருக்க கடைசியாக அவர் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கினார். அந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. முக்கியமாக படத்தில் இடம்பெற்ற பிளாஷ்பேக் போர்ஷனை வைத்து லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் கிண்டல் அதிகமாகவே செய்தார்கள். இதனால் எப்படியாவது அடுத்த படத்தில் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் அவர். அந்தவகையில் அவர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கிவருகிறார்.

லோகேஷ் கனகராஜின் ஸ்பெஷல் என்ன?: லோகேஷ் கனகராஜின் ஸ்பெஷல்களில் ஒன்று எல்சியூ. தான் இயக்கிய முந்தைய படங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை அடுத்த படத்திலும் கொண்டுவந்து இணைப்பது வரவேற்பை பெற்றது. ஆனால் அதுவும் லியோவில் எடுபடாமல் போனது. இந்த எல்சியூ தவிர்த்து தன்னுடைய படங்களில் ரெட்ரோ பாடல்களை ஒலிக்கவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அவருக்கு பிறகுதான் பல இயக்குநர்கள் தங்கள் படங்களில் அந்த மாதிரியான பாடல்களை ஒலிக்கவிடுவது அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கூலி அப்டேட்: லோகேஷ் கனகராஜ் இப்போது இயக்கிவரும் கூலி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருக்கிறது. முதன்முறையாக ரஜினியும், லோகேஷும் இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் தரமான சம்பவம் செய்யும் என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் ரஜினியுடன் ஆமிர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். ரஜினிகாந்த் தனது பகுதி ஷூட்டிங்கை முடித்துவிட்டார்.
ஆமிர் கான் பிறந்தநாள்: இந்நிலையில் ஆமிர் கான் இன்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி லோகேஷ் கனகராஜ் அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "பிறந்தநாள் வாழ்த்துகள் ஆமிர் கான் சார். நம்மிடையேயான உரையாடல்கள் ரொம்பவே அழகாக இருந்தன. உங்களது கதை சொல்லும் திறமை என்னை வெகுவாக ஈர்த்திருக்கிறது. இந்த அற்புதமான நாளை உங்களோடு பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக இன்று ஆமிர் கான் மட்டுமின்றி லோகேஷ் கனகராஜும் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இப்படத்தில் முதலில் அமீர் கான் ஏற்றிருந்த கேரக்டரில் நடிக்க ஷாருக்கானிடம்தான் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டார். முதன்முறையாக அமீர் கான் தமிழ் படத்தில் நடிப்பதால் எப்படிப்பட்ட ரோலினை லோகி அவருக்கு கொடுத்திருப்பார்; ரஜினியும் அவரும் தோன்றும் காட்சிகள் எவ்வளவு மாஸாக இருக்கும் போன்ற எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கின்றன. நிச்சயம் லோகேஷ் எந்த விஷயத்திலும் குறை வைக்கமாட்டார். பக்கா மாஸ் சம்பவமாக செய்வார் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
பட்டையை கிளப்பிய டைட்டில் டீசர்: படத்தில் தேவா என்கிற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் ரஜினிகாந்த். படத்தின் டைட்டில் டீசர் கடந்த வருடம் வெளியாகி பட்டையை கிளப்பியது. அதிலிருந்தே படத்துக்கு எக்கச்சக்க ஹைப் ஏறியிருக்கிறது. வழக்கம்போல் அனிருத்தான் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் இப்போது சென்னையில் மும்முரமாக நடந்துவருகிறது. இந்த ஷெட்யூல்தான் இறுதி ஷெட்யூல் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
என்ன தகவல்?: அதாவது இந்தப் படம் கண்டிப்பாக இந்திய அளவில் வசூலில் சாதனை படைக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் ரஜினி, லோகேஷ் என இரண்டு பேருமே இந்திய திரைத்துறையில் பிரபலமானவர்கள். எனவே இப்படத்தின் ஓடிடி ரைட்ஸை வாங்க பல நிறுவனங்கள் போட்டிப்போடுகின்றனவாம். அவற்றில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்தான் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி எவ்வளவு தொகை கேட்டாலும் பேரம் பேசாமல் கொடுத்துவிட்டு வாங்கிவிட அந்நிறுவனம் தயாராக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரும்பு கை மாயாவி: அதேபோல் இப்படத்தில் பல வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த்துடன் சேர்ந்து சத்யராஜும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருக்கும் இரும்பு கை மாயாவி படத்தின் கதையை கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ஆமிர் கானிடம் சொன்னதாகவும்; அது ஆமிர் கானுக்கு ரொம்பவே பிடித்துவிட்டதால் பேசாமல் அந்தப் படத்தில் நாமே நடிக்கலாமா என்கிற யோசனையில் அவர் இருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஒருவேளை நடித்தால் அந்தப் படம் இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய சினிமா பக்கம் கவனம்: ஆமிர் கானை பொறுத்தவரை தற்போது தென்னிந்திய சினிமா பக்கம் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார். அவர் மட்டுமின்றி ஷாருக்கானும் அப்படித்தான் இருக்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயனை சந்தித்த ஆமிர் கான் உங்கள் முதல் ஹிந்தி படத்தை நான் தயாரிக்கிறேன் என்று உறுதி கொடுத்திருக்கிறார். அதேபோல் டிராகன் படத்தின் மெகா வெற்றியை பெற்று அந்தப் படத்தின் ஹீரோ பிரதீப் ரங்கநாதனையும் சமீபத்தில் ஆமிர் சந்தித்தார். கூலி படத்துக்கு பிறகு நிச்சயமாக ஆமிர் கான் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் ஒரு எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.


Click it and Unblock the Notifications











